வாங்க வம்பளப்போம் – வங்கிகளின் ஸ்திரத்தன்மை
தொழிற்சங்கங்கள் அரசுகளுக்கும் மக்களுக்கும் வழிகாட்டும் காலம் ஓன்று இருந்தது. ஊழியர்களுக்கு ‘நல்ல பணி – மங்காத உரிமைக் குரல்’ என அவர்கள் நினைவூட்டிய நாட்கள் இருந்தன. இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல அவர்கள் கவனம் அதிகாரம் மற்றும் இடைத்தரகர் தொனி என மாறிவிட்டது.
ஆனால் கடந்த இரண்டு மூன்று வாரங்களாக வங்கிகளில் மக்கள் வைக்கும் சேமிப்புகள் பாதுகாக்கப்படாது என்னும் அளவு ஒரு மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் படப் போகிறது என்பதை வாட்ஸ் அப் வழியாக மக்களிடம் வங்கி ஊழியர் தொழிற்சங்கங்கள் கொண்டு சென்றார்கள். அது மிகவும் பாராட்டத் தக்கது. மைய அரசு அதை மறுத்துள்ளது. அரசு தந்த விளக்கத்துக்கான இணைப்பு ————இது. ஐயப்பாடுகளைக் களையும் பொறுப்பும் , சந்தேகமின்றி மக்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் பொறுப்பும் அரசுக்கு உண்டு.
என்னிடம் பலரும் இது பற்றிக் கவலை தெரிவித்தபோது நான் தந்த பதில் “உழைத்து சேமிப்போர் இன்னும் பெரும்பாலானோர். எனவே இப்படி ஒரு சட்டம் கொண்டு வந்து எந்த ஒரு அரசும் மக்களின் நம்பிக்கையை இழக்கும் முட்டாள் தனத்தை செய்யாது ” .
இப்போது வம்புக்கு வருவோம்.
வங்கிகள் ஸ்திரமாக இருக்க வேண்டும் இல்லையா ? அப்படியென்றால் வாங்கிய கடனை நாம் திருப்பிக் கட்ட வேண்டும் இல்லையா ? விஜய் மல்லையா தவிர மற்ற எல்லோரும் நேர்மையாய் இருந்திருந்தால் இன்று வாராக் கடனால் வங்கிகள் திணறி இருக்காது இல்லையா?
விஜய் மல்லையா பற்றி பேசும் அதே கட்சிகள் மக்களிடம் ‘அதிக தவணை கேளுங்கள். வட்டியை மட்டும் விலக்கிக் கொள்ளக் கேளுங்கள் . ஆனால் அசலைக் கட்டி விடுங்கள் ‘ என்று கூறுகிறார்களா? கந்து வட்டிக்காரன் செய்வது தவறு என்போர் வாயில்லாத் பூச்சியாய் இருக்கும் வங்கி அதிகாரிகள் நிலையை என்றாவது நினைக்கிறார்களா ?
வைப்புத் தொகைக்கு வட்டி தர வங்கிகள் அதை விட அதிகத் தொகைக்கு கடன் கொடுத்து, அதன் வட்டியை வசூல் செய்து அந்த வருவாயில் தானே வாய்ப்புக்கு வட்டி தர முடியும்?
கடனை அடைப்பவர்கள் சிறுபான்மையினராகும் நிலை. வரி கட்டுபவர்கள் சிறுபான்மை. ‘இலவச வாழ்க்கை – வரி கட்டாத வாழ்க்கை ‘ பெரும்பான்மையினரின் கனவு . இதனால் தான் நாம் நம் அரசு நிறுவனங்கள் அழிவதைக் காண்கிறோம்.
சில நாட்கள் முன்பு நான் பயணம் செய்த போது மைலாப்பூரில் ஒரு ஆள் என்னுடன் ஏறினார். நான் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு நடத்துனருக்கு வேண்டுகோளாக ‘திருவான்மியூர் ஒரு டிக்கட் ‘ என திரும்பாத திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தேன். என் பக்கம் திரும்பாமல் அந்த ஆளிடம் ‘டிக்கட் எடுங்க ‘ என்றார். அந்த ஆளோ ‘எனக்கு உடம்பு சரியில்லை. என்னை இறக்கி விடுங்கள்’ என்றார். ‘முதலில் டிக்கட் எடுங்க . அடுத்த ஸ்டாப்பில் இறங்கலாம் ‘ என்ற நடத்துனர் எவ்வளவளோ மரியாதையாய் பிறகு கண்டிப்பாக் கேட்டுப் பார்த்தார். அந்த ஆள் மந்தவெளி வந்ததும் இறங்கிப் போய் விட்டார். நடத்துனர் மிகவும் வருத்தமும் ஆத்திரமுமாகப் புலம்பினார். அதன் பின்னரே என்னிடம் பணம் வாங்கி சீட்டு கொடுத்தார்.
‘இலவசம். அடாவடித்தனம். ஏமாற்றும் எண்ணம்.’ இதே குறியாய் இருப்போர் எண்ணிக்கை மிகுந்தால் எந்த அரசாலும் நம் மக்களை கரை சேர்க்க முடியாது.
(image courtesy:jobsali.in)
//‘இலவச வாழ்க்கை – வரி கட்டாத வாழ்க்கை ‘ பெரும்பான்மையினரின் கனவு . //
முற்றிலும் உண்மை இந்தியாவில்.
நல்ல பதிவு