வாங்க வம்பளப்போம் – ஸ்டாலின் மனம் வைத்தால்
சில மாதங்கள் முன்பு இந்தியாவில் வேறு எந்தக் கட்சியும் (நானறிந்த வரை) செய்யாத ஒரு பணியை திமுக முன்னெடுத்தது. ஏரி குளங்களைத் தூர் வாரினார்கள். அதுவும் மழைக்காலத்துக்கு முன்பாக. மிகவும் உருப்படியான வேலை.
உண்மையில் களப் பணி என்று கட்சிகள் இறங்கவே மாட்டார்கள். அரசியல் ஆதாயத்துக்காகக் கூட அவ்வளவெல்லாம் மெனக்கெட மாட்டார்கள். அதிக பட்சம் இலவச வேட்டி சேலை இவற்றோடு நிறுத்திக் கொள்வார்கள். திமுக நல்ல மதிப்பெண் வாங்கிய குழந்தைகளுகுக்குப் பரிசெல்லாம் கொடுத்துப் பாராட்டியதும் மிகவும் பாராட்ட வேண்டிய ஒன்றே.
சரி வம்பு என்ன இதில் என நீங்கள் யோசிக்கலாம். வம்புக்கு வருகிறேன். நாமறிந்த வரை மிகவும் ஆதாயமான ஒன்று யாராலும் எளிதாய் சரிபார்க்க முடியாத ஒரு ஊழல் சாலைகள் அமைப்பதில் மற்றும் தூர் வாருவதில் தான் இருக்கிறது என்பது அனேகமாக எல்லோருக்குமே தெரியும்.
முதல் வம்பு என்னுடையது என்னவென்றால் கட்சிப் பணத்திலேயே மக்கள் சேவை செய்யும் திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஊழலே இல்லாத ஆட்சியை உறுதி செய்ய வேண்டும்.
அதை விட முக்கியமான ஒரு வம்பு இது தான். ஒரு குளம் அல்லது ஏரியைத் தூர் வார எவ்வளவு செலவாகிறது என்பதை இப்போதே திமுக போட்டு உடைக்க வேண்டும். ஒரு விஷயம் எனக்கு மற்றும் உங்களுக்கு நன்றாகவே தெரியும். நூறு மீட்டர் ஊர்வலம் போகக் கூட இன்று எந்தக் கட்சிக்காரத் தொண்டரும் இலவசமாக வர மாட்டார். பேட்டா மற்றும் சரக்கு கொடுத்தால் தான் வருவார். எனவே இலவசமாக இதைத் திமுக செய்து வாங்கி இருக்க முடியாது. நமக்கு ஒரு ஏரி அல்லது குளம் தூர் வார உண்மையிலேயே குறைந்த பட்சம் எவ்வளவு ஆகும் என்பதை திமுக தெரிவித்தால் நம் சாலைகள் மற்றும் ஏரி குளங்கள் இவற்றை வைத்து எவ்வளவு பணம் கொள்ளை போகிறது என்பதை யூகிக்க உதவியாய் இருக்கும்.
மக்களிடம் நிதி பெறாமல் ஒரு அரசியல் கட்சியால் இவ்வளவு செய்ய இயலுமென்றால் மக்களிடம் வரி வசூல் செய்யும் ஒரு அரசால் எவ்வளவு செய்ய இயல வேண்டும்?
குறிப்பாக ஒப்பந்தப் புள்ளிகள் (டெண்டர்) வழி பணிகளைச் செய்யும் போது என்ன தொகை முன் வைக்கிறார்கள் என்பதை சரி பார்க்கவும் -அது குறிப்பிட்ட காலத்தில் முடிகிறதா அல்லது மக்களுக்குப் பயன் படுகிறதா- இல்லை தரக் குறைவான வேலை செய்து தப்பிக்கிறார்களா – இவை எல்லாவற்றையும் சரிபார்க்க நமக்கு உதவியாய் இருக்கும்.
நமக்குத் தெரிய வேண்டியதெல்லாம் ஒரு ஊரின் சாலை பராமரிப்பு, நீர் பராமரிப்புக்கு என்ன செலவு ஆகும் என்பதும் , அப்படி செய்யும் செலவு எத்தனை வருடம் தாக்குப் பிடிக்கும் சேவையை நமக்குத் தரும் என்பதுமே.