எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் மற்றும் ஆர் அபிலாஷுடன் நேர்காணல்கள்
தமது இணைய தளத்தில் தம்முடன் மற்றும் எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரின் பேட்டிகளைத் தமது இணைய தளத்தில் ஆர். அபிலாஷ் வெளியிட்டுள்ளார். அதற்கான இணைப்பு ——————- இது.
‘பவுண்டன் இங்க்’ என்னும் இதழில் வெளி வந்துள்ள இந்த நேர்காணல்களை நந்தினி கிருஷ்ணன் செய்துள்ளார்.
மனுஷ்ய புத்திரனும், எஸ்.ராவும் விரைவில் படைப்பாளிகளாய் முப்பது ஆண்டுகளை நிறைவு செய்வார்கள். எஸ்.ரா முழு நேர இலக்கியப் பணியில் எப்படித் தாக்குப் பிடித்தார் என்பதைத் தமது நேர்காணலில் விளக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக இருந்த சொந்தங்கள் மற்றும் குடும்பத்தினர் மிகவும் போற்றப் பட வேண்டியவர்கள். அவர் ஒரு விதி விலக்கு. குடும்பமே முதலில் பல தடைக் கற்களைக் கொண்டு வரும் எழுத்தாளனக்கு. இது அனேகமாக எல்லா எழுத்தாளர்களுக்கும் இருக்கும் பிரச்சனை. எஸ்.ரா உலக இலக்கியங்களை ஆழ்ந்து வாசித்தவர். கலைத்தரமான திரைப் படங்களில் ரசனை உள்ளவர்.
மனுஷ்ய புத்திரன் கவிஞராக, சினிமாவுக்குப் பாட்டு எழுதாத நவீனக் கவிஞராகத் தாக்குப் பிடித்திருப்பது பெரிய சாதனை. அவர் பத்திரிக்கை மற்றும் பதிப்பகம் நடத்துவது அதைக் காட்டிலும் அரிய சாதனை. அரசியலில் அவர் கண்டிப்பாக சுதந்திர சிந்தனையை வெளிப்படுத்த இயலவே இயலாது. இருந்தாலும் அது அவரது உரிமை. தேர்வு.
ஆர் அபிலாஷ் இவர்கள் இருவரை விடவும் இளையவர். நவீனத்துவத்தின் சாத்தியங்களை நன்கறிந்தவர். இலக்கிய விமர்சனம், வாசிப்பு இரண்டையும் தொடர்ந்து செய்து வருபவர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு புத்தகங்களைப் பதிப்பிப்பதே பெரிய சவாலாக இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. ஆனால் வாசிப்பு என்பது இல்லாமலே போய்க் கொண்டிருக்கிருக்கிறது. திரைப்படம் வழியாகக் கலையைத் தேடும் போக்கு அதிகரித்துள்ளது.
புத்தகங்களை வாசித்து விமர்சிப்போர் மிகக் குறைவு. அதை வாசித்துக் காட்டும் ஒரு நிகழ்வை ஒழுங்கு செய்வதே ஒரே வழி என்கிறார் அபிலாஷ்.
கதை, கவிதை, கட்டுரைகள் வழி எழுத்தாளன் தன் தரிசனங்களை, தேடல்களை மற்றும் கனவுகளை பதிவு செய்து கொண்டே இருப்பான். மூச்சு விடுவது நடமாடுவது போல அவனுக்கு எழுத்து உயிர் வாழ்தலில் இயல்பான ஒரு அம்சமாகும்.
சமுதாயத்துடன் ஒரு உரையாடலை அவன் வாழ் நாள் முழுதும் தொடர்கிறான். அவன் புத்தகங்கள் வழியே அதே உரையாடல் அடுத்ததடுத்த தலைமுறைகளுடனும் நிகழ்கிறது.