ஒரு நுட்பமான அழகிய காதல் கவிதை
கவிதையின் பெரிய பலம் அபாராமான அதன் சுமக்கும் ஆற்றல். மிகவும் சிக்கலான மனித உறவுப் பரிமாற்றங்கள், நீண்டு விரியும் ஒரு நாலுக்கான கதை, என்றும் விளங்கிக் கொள்ளவே முடியாத கேள்விகளுள் ஒன்று எதையும் சுமக்கும் வல்லமை கவிதைக்கு உண்டு. அதன் சாத்தியங்கள் பற்றி அறிந்த கவிஞர் லகுவாய் அதை வாசகனின் ரசனைக்குத் தருவதில் வெற்றி அடைகிறார்.
தடம் ஜனவரி 2018 இதழில் செல்வி ராமச்சந்திரனின் ‘இன்று என் பெயர் ஆரஞ்சு ட்ரீ ‘ என்னும் கவிதை காதலன் தன் காதலிக்கு அடிக்கடி பெயரை மாற்றி அழைப்பதில் உள்ள உளவியலைத் தொடுகிறார்.
உன் அலைபேசியில்
தினமும் ஒரு பெயர் எனக்கு
இன்று ஆரஞ்சு ட்ரீ
நேற்று நான் ப்ளூ ரோஸ்
புதிய பெயரில் என்னை அழைக்கும் போது
புதிய பெண்ணோடு பேசுவது போலவே இருக்கிறது உனக்கு
புதிய பெயரில் எனது பெயர்
அலைபேசியில் ஒளிரும் போது
பழைய துயரங்கள் அழிந்து விடுகின்றன
பெயர்களாலான உலகத்தில்
பெயர்களை மாற்றும் போது
இந்த உலகமும் மாறி விடுகிறது
ஆணின் மனப்பாங்கு தினமும் புதிய பெண் என்னும் தனது அனுமானத்தையும் அதனால் தனக்குள் நிழலாடும் அச்சத்தையும் கவிதையில் காதலி நுட்பமாகப் பதிவு செய்கிறாள். மறுபக்கம் கொஞ்சம் கரிசனத்தோடு புதிய பெயரைப் பார்க்கும் போது பழைய துயர்ங்கள் அழிந்து விடுகின்றன என்கிறாள்.
பெயர்கள் ஒரு பண்பாட்டின் நீட்சியையே சுட்டுகின்றன. பெற்றோரின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் தாங்கும் பெயர் தனது காதலியின் குண நலன்களைக் கட்டிப் போட்டு விடுவதாகக் காதலன் நம்புகிறான். பெண் வெளிப்படுத்தும் நுட்பமான உணர்வுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று. அவை வெளிப்படும் விதங்களும் அவ்வாறானவையே. சமூகத்தில் ஜாதி மற்றும் ஊரின் மற்றும் நகர் அல்லது கிராமப் புறம் என்பதின் அடையாளமாகவே பெயர் இருக்கிறது.
பெயர் தன் இருப்பின் தன் உள்ளின் அடையாளம் இல்லை என்பதாலேயே படைப்பாளி ஒரு புனைப் பெயரில் எழுதுகிறான்.
(image courtesy:renatures.com)