பொறாமை பற்றி ஆர். அபிலாஷ்
நவீனப் புனை கதை எழுத்தாளர்கள் நுட்பமாக மட்டுமே கதைகளில் நல்லது – தீயது, அறம்- மறம், விழுமியங்கள்- விளங்கிக் கொள்ள முடியாத சுய நலம் என்பவற்றைத் தொட்டுச் செல்வார்கள். ஒரு அபுனைவு வழியே அவர்கள் நேரடியாகப் பேசுவது அபூர்வமே. ஆர். அபிலாஷ் பொறாமை பற்றி ஜனவரி 2018 தீராநதி இதழில் அலசி இருக்கிறார்.
1992 – 93ல் நடந்த மதக் கலவரம் , பின்னர் நிகழ்ந்த குண்டு வெடிப்பு இவை இரண்டுமே வணிக ரீதியான பொறாமையின் பின் விளைவுகளே. சில வணிகர்கள் துவக்கிய ஒன்று ஒரு பெரிய பேரழிவையும் மக்களின் இடையே மன வேற்றுமையையும் உண்டு செய்து விட்டது.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் – என்னும் குறளை மேற்கோள் இடுகிறார் அபிலாஷ். இந்தக் குறளின் சுருக்கமான பொருள் பொறாமை உடையவனைப் பார்த்த திருமகள் தன் தமக்கையிடம் அவனைக் காட்டி விடுவாள் என்பதாகும். பொறாமையால் ஒருவரது மனம் கெடுகிறது, மகிழ்ச்சி கெடுகிறது என்றெல்லாம் நேரடியாக அபிலாஷ் பலவற்றையும் எடுத்து உரைக்கிறார்.
“ஆத்தாமைப் (ஆற்றாமைப்) பட்டவன் செய் விளையுமா? அங்கலாய்த்தவன் செய் விளையுமா?” என்று ஒரு சொலவடை எங்கள் ஊரில் உண்டு.
இதம் சாராம்சம் என்ன? நல்ல விளைச்சல் பக்கத்து வயலில் என்றால் “எனக்கு ஏன் இந்த அளவு விளையவில்லை? எங்கே கோட்டை விட்டேன்?” என்று அங்கலாய்க்கலாம். ஆனால் வயிறு எறியவோ அல்லது பொறாமைப் படவோ கூடாது.
உண்மையில் ஒருவரை ஒப்பிட்டுக் கொள்வது இருக்கும் வரை பொறாமை என்பது இருக்கவே செய்யும். அது மென்மையானதாய் இருக்கலாம். இல்லை மோசமாக இருக்கலாம். ஆனால் அதை விட்டொழிப்பது சாத்தியம் என்று எனக்குத் தோன்றவில்லை. குழந்தைப் பருவத்தில் இருந்து முதிர்ச்சி என்று ஒன்று முளை விட ஆரம்பிக்கும் போதே நாம் முதலில் கற்றுக் கொடுப்பது ஏற்றத் தாழ்வுகள் தான். அதிக உரிமை உள்ளவர்கள் – உரிமையில்லாதவர்கள், கை ஓங்கியவர்கள் – இளப்பமானவர்கள் என்பவற்றை தான்.
பிறரை ஒப்பிடாமல் என் இன்பம் துன்பம், வளம் அல்லது வறுமை எதுவுமே கிடையாது.
உண்மையில் ஒப்பிட்டு வாழும், மகிழும் அல்லது வருந்தும் மாய வலையிலிருந்து நாம் வெளியே வர வேண்டும். அது தன்வயமாய் கலை அல்லது இலக்கியம் அல்லது சமூகப் பணி என ஒரு பெரிய கோட்டை வரைந்து அதைச் சின்னக் கோடாக்கினால் மட்டுமே சாத்தியம்.
அது போகாத ஊருக்கு வழி என்றால் வேறு ஒன்றையும் நாம் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளலாம். மன அழுத்தம் உள்ளவர்களிடம் அதை நெறிப்படுத்தினால் – அதாவது அந்த வியாதியை ஒரு வரமாகப் பயன்படுத்தினால்- பெரிய சாதனைகள் அவர்களால் சாத்தியம். அதே போல் பொறாமையை நாம் மற்றொரு ஆளின் மீது குவிக்காமல் ‘நாம் இன்னும் முன்னேற வேண்டும்’ என்னும் நெறிப்படுத்துதல் வாயிலாக ஒரு ஆற்றலாக மாற்ற இயலும்.
சுய நலம், பொறாமை, குறுகிய நோக்கு இவையில்லாத மனித வாழ்க்கையும் இல்லை. இவற்றை மையப் படுத்தாத இலக்கியமும் இல்லை.