வாங்க வம்பளப்போம் – அறம் திரைப்படமும் – ஆர்கே நகரின் 20 ரூபாய் நோட்டும்
‘அறம்’ திரைப்படம் பற்றி நிறைய ஆஹா ஓஹோ வந்ததும் நான் திரையரங்கில் இதைப் பார்க்க முடிவு செய்தேன். ஆனால் அதற்குள் பொங்கல் வந்து விட்டது. பொங்கலன்று இதை விளம்பரங்களோடு பார்க்க விரும்பாமல் அதை ‘ரெக்கார்ட்’ செய்து , ஒரு வழியாக இன்று தான் பார்த்தேன்.
சற்றே ஏமாற்றம். ஆனால் இரண்டு விஷயங்களை ரசித்தேன். ஒரு நடிகைக்கு வலுவான கதா பாத்திரம் தரவே மாட்டார்கள் தமிழ் இயக்குனர்கள். இந்தப் படத்தில் நயன் தாரா நன்றாகவே தமது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். மனித நேயமும், பெண்மையும், கண்டிப்பும் நிறைந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி. அதை மிகவும் நன்றாகவே செய்திருக்கிறார்.
சரி வம்புக்கு வருவோம். நீங்கள் டீக்கடைக்குப் போயிருப்பீர்கள். பத்துக்கு ஒன்பது கடைகளில் டீ கிளாஸைக் கல்லாக்காரரோ அல்லது டீ மாஸ்டரோ கழுவ மாட்டார்கள். அதற்கு என்று ஒரு பையன் இருப்பான். ஏன் அப்படி? இது அவர்கள் வேலை கிடையாது. அரசு அலுவலகத்தில் ஒவ்வொரு வேலைக்கும் ஒருவர் பொறுப்பு. அதிகாரியில் கடை நிலையானவருக்கே மூன்று அல்லது நான்கு வேலை இருக்கும். கலெக்டருக்குத் தலை போகிற வேலை தினசரி நிறையவே இருக்கும். அவர் இரண்டு நாள் ஒரு இடத்தில் டேரா அடிப்பது சாத்தியமே இல்லை. தேவையுமில்லை. தான் இருந்த இடத்தில் இருந்து எல்லாவற்றையும் இயக்குகிற – உறுதி செய்கிற இளைஞர் ஒருவரையே தேடி இந்தக் கடுமையான பரிட்சையை அவர்கள் வைக்கிறார்கள். தானே கண்ணாம்பாள் மனோகராவுக்கு சொன்னது போலச் சொல்லி ஒரு குட்டிப் பையனை உசுப்பி விட வேண்டும் என்பது மிகவும் சினிமாத்தனமானது.
முக்கியமான வம்பு என நான் அளக்க விரும்பது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை என்பதெல்லாம் அரசின் வேலை என்னும் அசட்டுத்தனமான வசனங்கள் பற்றி. சாலையில் பிறரின் பாதுகாப்பு பற்றி அக்கறை இல்லாத வாகன ஓட்டிகள். பொது இடங்களில், பள்ளிகளில், தனியார் அலுவலகங்களில், வீடுகளுக்குள் பாதுகாப்பு – அது குறித்த முன்னெச்சரிக்கை, அல்லது அது பற்றிய அறிவு எத்தனை பேருக்கு உண்டு?
திரும்பத் திரும்ப அரை வேக்காட்டு வசனங்களுடன் அரசாங்கத்தை விமர்சிக்கும் படமாய் எடுக்கிறீர்களே? மக்கள் தன்னை சுய விமர்சனம் செய்து கொள்ளும் படங்களை எடுக்கவே மாட்டீர்களா?
இந்த சிந்தனை ஓடிய போது தான் ஆர்கே நகரின் 20 ரூபாய் நோட்டு நினைவுக்கு வந்தது. நாட்டை ஊழல்வாதிகளிடமிருந்து யாருமே காக்க முடியாமல் செய்வது பணம் வாங்கி ஓட்டுப் போடும் மாண்புமிகு மிகவும் மரியாதைக்குரிய வணக்கத்துக்குரிய வாக்களர்களே.