கலிபோர்னியா – அலுங்காமல் தெருக் கூட்டுவார் தொழிலாளி
முதுகில் ஒரு சிறிய இயந்திரம் அது கையிலுள்ள குழாய் வழியாக அழுத்தமான காற்றைப் பீச்சி அடிக்கிறது. அதை வைத்து அவர் நடைபாதைகளை மற்றும் அவற்றை ஒட்டியுள்ள புல் தரைகளை சுத்தம் செய்கிறார். ஒரு பக்கமாகக் காற்றைச் செலுத்திய படியே குப்பைகளை (பெரிதும் சருகுகள் மட்டுமே) ஒரு குவியலாக்குகிறார். போகிற போக்கில் சருகுகள் உயர எழும்பி வேறு இடத்தில் ஒடுங்கினால் அவர் போய்க் கொண்டே இருப்பார். ஜன்னல் மீது படிந்திருக்கும் சருகுகளை அடுத்த புகைப்படத்தில் காணுங்கள்.
ஓரளவு குவியல்கள் ஆனதும் பெரிய சாக்குப் பைகளில் அந்தச் சருகுகளைப் போட்டு மூட்டையாகக் கட்டி வைத்து விடுகிறார். அடுத்த புகைப்படம் பாருங்கள்.
அதன் பிறகு பெரிய குப்பை லாரி வந்து அதை அள்ளிப் போகிறது. மொத்த வேலையும் எளிய, நாற்றம் அடிக்காத ஒரு வேலையாகவே நடந்து முடிகிறது. தெரு ஓரத்தில் ஒரு போத்தல் அல்லது ஒரு டிஷ்யூ காகிதம் அல்லது பாதி சாப்பிட்ட பழம் ஆகியவை கண்களில் தென்படுவது வெகு வெகு அபூர்வம். எல்லோரிடமுமே குப்பை போடாமல் இருக்கும் பழக்கம் இருக்கிறது. எல்லா வளாகங்கங்களிலும் பிளாஸ்டிக், காகிதம் மற்றும் மக்கும் குப்பை ஆகிய மூன்றைப் பிரித்தே போட வேண்டும். அதற்கான குப்பைத் தொட்டிகள் இருக்கின்றன. வெளியே போகும் போது, தெரு ஓரக் குப்பைத் தொட்டியைப் பயன்படுத்த அவர்கள் தவறுவதே இல்லை. இந்தியாவில் இது உடனடி சாத்தியமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நடமுறைப் படுத்த முடியாத ஒன்று அல்ல. விழிப்புணர்வை உண்டாக்கவும், தொடக்கத்தில் கண்காணித்துப் பயிற்சி அளிக்கவும் நிறைய செலவு ஆகலாம். பிறகு மக்கள் தாமே அந்த வழியில் தொடர்ந்து இயங்குவார்கள்.