அமெரிக்காவில் தொழில் செய்யும் இந்திய மூளை – ஒரு புகைப்படம்
ஒரு விழா என்றால் நம் ஊரில் என்ன முதலில் வந்து இறங்கும் நீண்ட கம்புகள் பந்தல் போட வரும். கம்பிகளும் வரலாம். ஆனால் உத்திரவாதமாக அவை திறந்த லாரியில் பின்னாடி வருவோர் உயிரைப் பறித்தாலும் பரவாயில்லை என்பது போல நீட்டிக் கொண்டிருக்கும். இல்லையா? ஆனால் அமெரிக்காவில் அப்படி ஒரு வண்டியை நாம் ஓட்ட முடியுமா? முடியாது. அதே சமயம் இந்தியா போலவே இந்த மாதிரி கம்பி எடுத்துப் போக அதிக செலவில்லாத ஒரு வண்டி வேண்டுமா வேண்டாமா? கட்டாயம் வேண்டும். ஒரு குடும்ப நிகழ்ச்சிக்கு மேடை மற்றும் அரங்க அலங்காரம் செய்தவர், கம்பிகளை காருக்கு உள்ளேயே வைக்கும் வண்ணம் காரை வடிவமைத்திருந்தார். அவரது தொழிலுக்கும் மற்றும் குடும்பம் பயன்படுத்துவதற்கும் இரண்டுக்குமே அதே கார் தான். இது போன்ற கூடுதல்கள் அல்லது விருந்துகள் ஏற்பாடு செய்யும் நம் ஆட்கள் அழைப்பது நம் நாட்டு ஒப்பந்தக்காரர்களைத் தான். இந்தியா போன்றே நாம் உணர வேண்டாமா? வங்கி மூலமல்லாமல் நேரடி டாலர் நோட்டுக்களைத் தான் அவர்கள் வாங்கிக் கொள்கிறார்கள். சரி, கம்பி விஷயத்துக்கு வருவோம். நான் இந்த இந்தியா- அமெரிக்கா இரண்டுக்கும் மையமான இவரது காரின் வடிவமைப்பை ரசிக்கவே செய்தேன். முதலில் இவர்கள் அலங்காரம் செய்ய வந்து விட்டார்களா எனப் பார்க்க நானும் என் மருமகனும் போன போது விருந்தாளிகள் எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தார்கள் என நான் குழம்பி விட்டேன். அப்பா , அம்மா, பெண் குழந்தைகள் எனக் குடும்பமே அந்த அலங்கார வேலை செய்ய வந்து இறங்கி இருந்தார்கள். மிகவும் அழகாகவும் அந்த அலங்காரம் நடந்திருந்தது. நான் பாராட்டிய போது, அந்த அலங்காரத்தின் பல அம்சங்களை என் மகள் முடிவு செய்து, தேவையான சில பொருட்களையும் தருவித்துத் தந்தார் என்ற போது எனக்கு அவர்களது அடக்கம் வியப்பைத் தந்தது. என் மகளின் ரசனையும் தான்.