காஃப்காவின் படைப்புலகம் -1
நவீனத்துவத்தின் ஆகச் சிறந்த முன்னோடி பிரான்ஸ் காஃப்கா. அவரது வாழ் நாளில் அவரது படைப்புக்களில் பெரும்பான்மையானவை புத்தக வடிவம் பெறவில்லை. தமது நண்பரிடம் தான் எழுதி – அச்சில் வராத பிரதிகள் சிலவற்றை அழிக்கச் சொல்லி விட்டு மரித்தார். காபஃப்கா. நண்பர் மாக்ஸ் ப்ராட் அவர் கட்டளையை ஏற்காமல் நூல்கள் வெளிவர ஏற்பாடு செய்தார். பிறப்பால் யூதரான காஃப்கா ஜெர்மானிய மொழி பயின்று ஜெர்மானிய மொழியில் தான் எழுதினார். பொஹெமியா என்னும் நாட்டில் பிறந்தார். அது இப்போது செக் குடியரசின் ஒரு பகுதியாகும்.
யதார்த்தவாதத்தைக் கடந்து, கற்பனை மிகுந்த எழுத்து மற்றும் வாசிப்பு வாயிலாக நம் சமூகத்தின் அதிகார அடுக்குகளையும் மற்றும் நம் ஆழ் மனத்தின் நுட்பமான உணர்வுகளையும் தமது புனைவில் காஃப்கா நவீனத்துவத்தின் முழு வீச்சில் எழுதினார். அவர் கால கட்டத்தில் அவரது தடம் மிகவும் அரிய ஒன்று.
அவரது ஒரு சிறு கதைத் தொகுதியின் எல்லாக் கதைகளையும் விமர்சிக்கவே இந்தத் தொடர்.
அமெரிக்க வெளியீடான ‘Random House Franz Kafka Collected Stories’ என்னும் நூல் இரண்டு பகுதிகளாலானது. காஃப்கா காலத்தில் வெளியிடப் பட்ட கதைகள் மற்றும் அவர் காலத்துக்குப் பின் வெளியானவை என இரண்டாகப் பிரித்துத் தந்திருக்கிறார்கள்.
அவர் காலத்தில் வெளியானவை Meditation (1913), The Judgement (1913), The Stoker (1913), The Metamorphosis (1915) , In the Penal Colony (1915), A country Doctor (1919), A hunger artist (1924) பிற கதைகளை தனிப் பகுதியில் கொடுத்து இருக்கிறார்கள்.
Meditation, A country Doctor மற்றும் A hunger artist இந்த மூன்று கதைகளும் வித்தியாசமானவை. இந்தக் கதை ஒவ்வொன்றிலும், ஒரு பக்கம் – இரு பக்கங்கள் என்னும் அளவு சின்னஞ்சிறு கதைகள் ஒரே கதையின் உப கதைகளாகவும் இருக்கும் .
முதலில் Meditation என்னும் சிறுகதையைப் பார்ப்போம்.
இந்தக் கதையில் உள்ள சின்னஞ்சிறு உப கதைகள் முதல் வாசிப்பில் துண்டு துண்டாகவே நிற்பதாக நமக்குத் தோன்றலாம். ஆனால் நாம் ஒவ்வொரு உபகதை பிற உபகதைகளுடன் ஒன்று படும் ஒரு மையச் சரடைக் காண்கிறோம். அந்தச் சரடு என்ன என்பது நமக்கு Meditation கதையில் ஒரு பகுதியான Children on a country road என்னும் கதையில் கிடைத்து விடுகிறது. ஊஞ்சல் ஆடும் ஒரு குழந்தையின் வழியாகக் கூறப்படும் இந்தக் கதையில் நகர வாழ்க்கைக்கு நாம் நிர்ப்பந்திக்கப் படுவதும், நகரம் நோக்கிய நம் நகர்வு, தனது வாழ்விடத்தைத் தேர்வு செய்யும் உரிமை மறுக்கப்பட்டதன் வலியோடு துவங்குவதையும் சுட்டுகிறது. மாய யதார்த்தமாக அவர்கள் அஞ்சிய ஒரு குழு வந்து, குடும்பத்தையே மலைச் சரிவில் தள்ளி விட்டு விடுகிறது. அதன் முடிவில் வரும் சில கூர்மையான பேச்சுகள் கீழே:
அங்கே ( நகரத்தில்) கிறுக்குத்தனமான ஆட்களைப் பார்ப்பாய்
என்ன அங்கே அப்படி?
ஏனெனில் அவர்கள் களைப்படையவே மாட்டார்கள்
அது எப்படி?
ஏனெனில் அவர்கள் முட்டாள்கள்
முட்டாள்கள் களைப்படைய மாட்டார்களா என்ன?
முட்டாள்களுக்கு களைப்பு எங்கே இருந்து வரும்?
Unmasking a Confidence Trickster என்னும் உப கதைப் பகுதியில் நாம் நகரத்தின் உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் பாங்கை மாய யதார்த்ததில் காண்கிறோம். முகமில்லாதவர்கள், பார்வையால் வருவோரை வரவேற்பது போலவும் மறிப்பது போலவும் இரண்டுமாய்க் கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பே The tradesman என்னும் உபகதையில் ‘எனது பணம் முன்பின் அறியாதவர்கள் கையில் இருக்கிறது’ என்று பதிவு செய்கிறார். அந்தப் பத்தி முழுவதும் நம் செலவுகள் பிறரால் முடிவு செய்யப்படுவதே நகரின் வாழ்க்கை முறை என விவரிக்கிறார். Clothes என்னும் பகுதியில் நகரில் ஆடை அணிவதில் உள்ள கவனமும், விதவிதமான ஆடைகள் அங்கே தென்படுவதையும் விவரித்து விட்டு, மிகவும் கவித்துவமாக, வீட்டுக்குத் திரும்பியதும், தன் ஆடை இது வரை நகரில் தன்னை அடையாளப்படுத்தினாலும், இனி அணிய முடியாதபடி அழுக்காகவும் கசங்கியும் போய் விட்டது என முடிக்கிறார். Meditation கதைக்குக் கீழே வரும் கடைசி உபகதை Unhappiness. அதில் ஒரு சின்னஞ்சிறு குழந்தையின் ஆவி அவரது அறைக்குள் வந்து அவருடன் உரையாடுகிறது. பெரியவர்கள் உலகில் உள்ள பாசாங்குகள் இல்லாத ஒரு உரையாடல் அது.
இன்றும் வாசிப்பில் ‘யதார்த்தவாதம்’ மிகுந்த வர்ணனை மிகுந்த கதைகளை மட்டுமே வாசிக்கப் பழகி, நவீனத்துவக் கதைகளை வாசிக்கத் தயங்குவோர் பெரும்பான்மை. ஆனால் ஒரு நூற்றாண்டு முன்பு, காஃப்கா இவற்றைப் படைத்து இருப்பது அவரது புனைவின் வீச்சுக்கும் சமகாலம் தாண்டி வெகு தொலைவு செல்லும் கற்பனையின் உச்சத்துக்கும் நிரூபணமாகும்.
Meditation கதை நகரத்தில் ஒருவர் எதிர் கொள்ளும் ஒரு வெறுமை மற்றும் தனிமை, யாருடனும் ஒட்டவே முடியாத ஒரு வாழ்க்கை முறை இவை மிகவும் துல்லியமாக வெளிப்பட்டிருக்கின்றன. நம் ஆழ்மனம் நம்முடன் எப்போதும் ஒரு போராட்டம் செய்து கொண்டுதான் இருக்கிறது. முழுவதும் விண்டு விளங்கிக் கொள்ளா விட்டாலும், நாம் கனவுகளில் விசித்திரமான உணர்வுகளுக்கு ஆட்பட்டு, அவற்றுள் சிலவற்றை அடையாளப் படுத்திக் கொள்ளவும் செய்கிறோம். நம் ஆழ்மனம் பற்றிய பதிவுகளில் மாய யதார்த்தம் மற்றும் சஞ்சாரமான பதிவுகள் வருவது இயல்பே. காஃப்காவை வாசிக்க, வாசிக்க நாம் வாழ்க்கையை , மனத்தடைகள் இன்றிப் பார்க்கும் மாயம் நிகழ்வதைக் காண்கிறோம்.
மேலும் வாசிப்போம்.
(image courtesy:slideplayer.com)