காஃப்காவின் படைப்புலகம், காஃப்காவின் சிறுகதை, விமர்சனம், வர்க்கப் போராட்டம், தொழிலாளி வர்க்கம், மேல்தட்டு மனப்பான்மை
காஃப்காவின் படைப்புலகம் -3
நாம் அடுத்ததாக The stoker என்னும் சிறுகதையை விமர்சிப்போம்.
கார்ல் என்னும் 16 வயது இளைஞன் ஒரு வேலைக்காரப் பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டதால் அவள் கர்ப்பமாகி விடுகிறாள். அதன் பிறகு அவனை வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்து, அவனைக அமெரிக்காவுக்குச் செல்லும் கப்பலில் ஏற்றி விடுகிறார்கள் பெற்றோர். கப்பல் நியூயார்க் துறைமுகத்தைச் சென்று அடைந்து விடுகிறது. மற்ற பயணிகளுடன் கப்பலின் மேல் தளத்துக்கு வந்த கார்ல் , தான் கொண்டு வந்த குடையைக் கீழே தங்கியிருந்த அறையில் விட்டு விட்டு வந்து விட்டதை நினைவு கூர்கிறான். தன்னுடன் பேசிக் கொண்டே வந்த இளைஞனிடம், அவன் கப்பலை விட்டு வெளியேறாமல், தன் பெட்டியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி, பெட்டியை அவனிடம் ஒப்படைக்கிறான். பிறகு தன் குடையை எடுக்க, படிகளில் இறங்கி, கப்பலில் பல்வேறு தளங்கள் வழி போகும் போது, அவன் வழி தவறி விடுகிறான். ஒரு அறையில் ஆளரவம் கேட்கவே அதற்குள் நுழைகிறான். அந்த அறையில் இருப்பவன் ஸ்டோக்கர் – அதாவது கப்பலில் உள்ள நீராவி இயந்திரத்துகுக் கரி நிரப்புபவன். அவனிடம் கார்ல் முழு விவரமும் கூறவே, அவன் துறைமுகத்துக்குத் துறைமுகம் மக்களின் நேர்மை மாறிக் கொண்டே வரும் என்றும், இனியும் கார்லின் பெட்டி கிடைக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறி விடுகிறான். தனக்கு மீண்டும் மேல் தளம் போக வழி தெரியவில்லை எனக்கூறும் கார்லின் அவசரத்தை விடவும் தான் அனுபவிக்கும் மன உளைச்சலே பெரியது என அந்தக் கரி நிரப்புபவன், தனக்கு மேலாளராக உள்ள மாலுமி, தன்னை மோசமாக நடத்துவதாகவும், கழிப்பறையைக் கூடச் சுத்தம் செய்யும் படி கூறுவதாகவும் கார்லிடம் விவரிக்கிறான். கார்ல் அவனுடன் கப்பல் அதிகாரிகளைப் பார்க்கச் சென்று அவர்களிடம் கரி நிரப்புபவனின் அவல நிலை குறித்து முறையிடுகிறான். அப்போது கப்பல் அதிகாரிகளுடன் பயணிக்கும் அமெரிக்க செனெட்டர், அவன் தேடிப் போய்ப் பார்க்க வேண்டிய தாய் மாமனே என, கார்ல் மற்றும் அந்த செனட்டருக்கு விளங்க அவன் அவருடன் ஒரு படகில் கரைக்கு கிளம்பி விடுகிறான். கரி நிரப்புபவனிடம் தொடர்ந்து தனது நியாயத்தை எடுத்துக் கூறும் படி அறிவுரை கூறிய கார்ல், படகில் இருந்து பார்க்கும் போது, குற்றம் சாட்டப்பட மாலுமி, தனது தரப்பை நிரூபிக்க அழைத்து வந்த சாட்சிகளால் அந்த அதிகாரிகள் அறையே நிறைந்திருக்கக் காண்கிறான். கரி நிரப்புபவன் எப்படியும் வழி காட்டுவான் என்றே கார்ல் அவனுடன் பேசிக் கொண்டு இருந்தான். படகு நகரும் போது கார்ல் மனதுக்குள் இந்த செனெட்டர் மற்றும் மாமனை விட, அந்தத் தொழிலாளி நம்பத் தகுந்தவனோ என ஒரு எண்ணம் இழையோடுகிறது. இந்த இடத்தில் கதை நிறைவு பெற்று விடுகிறது.
இந்தக் கதையில் பயணப் பெட்டி ஒரு படிமமாக வருகிறது. கதையின் துவக்கத்தில் முக்கியத்துவம் பெற்ற அந்தப் பெட்டி கதை இறுதியில் மையக் கதாபாத்திரத்தால் மறக்கப் பட்டு விடுகிறது. இந்தப் பெட்டி தொழிலாளிகளால் பயன் பெறும் மேல் தட்டு மக்களின் தேவைகளைக் குறிக்கிறது. தொழிலாளிகளின் பிரச்சனைகள் மீது மேல் தட்டு அல்லது பிற வர்க்கம் காட்டும் அக்கறை தற்காலிகமானது மற்றும் உண்மையான பரிவும் பொறுப்புணர்ச்சியும் அற்றது என்பதே கதையின் சாராம்சம். மேல் தட்டு பயணத்தில் தன் வழியில் முன்னேறுவார்கள். தொழிலாளியின் போராட்டம் ஓயப் போவதே இல்லை என்பதே நாம் வாசிப்பால் உள்வாங்கிக் கொள்ளும் பதிவாகும்.
மேலும் வாசிப்போம்.
(image courtesy:brainyquote.com)