காஃப்காவின் படைப்புலகம் -4- The metamorphosis
சுமார் 15 வருங்களுக்குப் பிறகு காஃப்காவின் The metamorphosis என்னும் குறு நாவலை வாசித்தேன். முதல் முறை படிக்கும் போது இருந்த அதே தாக்கம் மற்றும் அதன் மையக் கரு பற்றிய இன்னும் ஆழ்ந்த புரிதலே இந்த முறை வாசிப்பில் நான் அனுபவித்தது.
The metamorphosis என்னும் இந்த நூல் உலக இலக்கிய வரலாற்றில் என்றும் தனியிடம் கொண்டது. மாய யதார்த்தத்தின் அவசியம் மற்றும் அதன் வலிமைக்கு இந்தப் படைப்பு ஆகச் சிறந்த எடுத்துக் காட்டு. The metamorphosis என்ற ஆங்கிலச் சொல் ஒரு கூட்டுப் புழு பட்டாம்பூச்சியாகும் வளர்ச்சிப் பரிணாமத்தைக் குறிப்பதாகும்.
ஒரு விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்க்கும் ஒரு இளைஞன் கிரெகார். அவன் ஒரு நாள் காலைக் கண் விழித்து எழும் போது தான் ஒரு ஆறு அடி நீளக் கரப்பானாக மாறி விட்டதை உணர்கிறான். அவனிடம் பேசும் திறன் மற்றும் இருக்கிறது. ஆனால் அதனால் என்ன பயன்?
அவன் குடும்பத்தினர் வருவாயை ஈடுகட்ட என அப்பா- அம்மா-தங்கை என மூவரும் வேலைக்குப் போகிறார்கள். நாளுக்கு நாள் அவனுக்கு எந்த உணவும் கொடுக்க விருப்பமில்லாத அளவு அவனது உருவம் அவர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்துகிறது. மிகவும் மனம் நொந்த அவன் உணவில்லாமல் மிகவும் நலிந்திருக்கும் போது ஆப்பிள்களை வீசி அப்பா அடித்ததால் அவனால் நகரவே மிகவும் சிரமப் படும் நிலை உருவாகி விடுகிறது. அவன் இறந்து விடுகிறான். அவனை வேலைக்காரி குப்பையோடு பெருக்கி வீசி விடுகிறாள். அதன் பின் குடும்பத்தி எஞ்சிய மூவரும் விடுப்பு எடுத்து கொண்டு வெளியே போய் வருகின்றனர். அவர்கள் முகத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அவன் கரப்பானாய் இருந்த மூன்று மாதம் கழித்து முதன் முதலாகத் தென்படுகின்றன.
மனித உறவுகள் எந்த அளவு உள்ளீடற்றவை என்பதை இதை விட ஒரு படைப்பு எடுத்துக் கூற இயலவே இயலாது. குடும்பம் என்னும் அமைப்பினுள் நாம் எந்த அளவு சிறைப்பட்டிருக்கிறோம் என்பதும், அந்த அமைப்பு தரும் அரவணைப்பு, அன்பு, ஆதரவு, பரிவு , பாசம் எல்லாமே ஒரு சில எதிர்பார்ப்புகளுக்கு உட்பட்டவையே என்பதும் இந்தப் படைப்பில் வெளிப்படும்.
காஃப்காவின் படைப்புக்களில் மனித உறவுகள் பற்றி நுட்பமான விமர்சனம் இருந்து கொண்டே இருக்கும். இந்த நாவலில் ஒரு தொழிலாளிக்கும் அவன் நிறுவனத்துக்கும் இருக்கும் உறவும் புரிதல்களும் மிகவும் பகடியுடனும் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன.
இந்தக் கதையை வாசித்த பின் வெறும் மாத நாவல் மட்டுமே படித்த வாசகர் கூட இதிலுள்ள மாய யதார்த்தத்தை நீக்கி விட்டு இதன் மையக் கருவைப் படைப்பாகத் தர இயலாது என்பதை ஏற்பார்.