காஃப்காவின் படைப்புலகம் -7 -The penal colony
காஃப்கா எழுத்தில் வழக்கமாக இருக்கும் ஒரு நுட்பமான அமைதி The penal colony கதையில் குறைவே. ஆனால் இந்தக் கதை எழுதப்பட்ட காலத்தில், முதல் உலகப் போரின் தாக்கத்தை உலகம் அனுபவித்துக் கொண்டிருந்தது. அப்போது ராணுவ அதிகாரிகளின் சிந்தனை மற்றும் அவர்களின் நடைமுறைகள் இவற்றைப் பற்றிய மிகவும் ஆழமான, ராணுவத்தின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு புனைவு இது.
ஒரு ராணுவ அதிகாரி, வெளி நாட்டில் இருந்து தகவல் தேடுபவராக (explorer) வந்து, ஒரு மரண தண்டனை நிறைவேற்றத்தைப் பார்வையிடுவதற்காக வந்திருக்கிறார். தண்டனை நிறைவேற்றும் விதம் மிகமிக விசித்திரமானது. ஒரு இயந்திரமே அந்த தண்டனையை நிறைவேற்றப் போகிறது. அது ஒரு அச்சு இயந்திரம் போல, இயந்திரத்தின் மேற்பகுதியில் உள்ள ஊசிகள் கீழே படுத்திருக்கும் ஆளின் உடல் முழுக்க எழுதிக் கொண்டே போகும். ரத்தம் பெருகி அவன் உயிரழ்ப்பான். அவன் உடல் மீது நிறைய ராணுவத்தின் அதிகாரத்தைப் பறை சாற்றும் வரிகள் எழுதப் பட்டிருக்கும். மரண தண்டனை விதிக்கப்பட்டவன் ஒரு சாதாராண ராணுவ வீரன். அவன் இரவில் தனது மேலதிகாரி வீட்டில் காவலிருக்கும் போது மணிக்கு ஒரு முறை அவர் வீட்டு வாயிற் கதவுக்கு சல்யூட் அடித்த படி இரவெல்லாம் விழித்திருக்க வேண்டும். அப்படி அவன் செய்யவில்லை என்பதை, திடீர் என மேற்பார்வையிட்ட அதிகாரி கண்டுபிடித்து விட்டார். உடனே அவனை அவர் சாட்டையால் அடிக்க அவன் அவருடைய கால்களை இறுக்கிப் பிடித்தபடி ‘சாட்டையடியை நிறுத்தா விட்டால் , நான் உம்மைக் கடித்துக் குதறி விடுவேன்’ என்கிறான். அதனாலேயே அவனுக்கு மரண தண்டனை.
பார்வையாளராகவும் தேடலாளராகவும் வந்திருக்கும் வெளி நாட்டு ராணுவ அதிகாரியிடம், தண்டனையை நிறைவேற்றவிருக்கும் அதிகாரி அந்த இயந்திரத்தைத் தற்போது இருக்கும் தலைமை அதிகாரிக்கு முன்னர் இருந்தவர் வடிவமைத்தாரென்றும், அதைப் பராமரிக்க இந்த அதிகாரி, எந்தப் பணமும் அல்லது கருவிகளும் தந்து உதவவில்லை என்றும் விளக்குகிறார். எனவே இந்த தண்டனை நிறைவேற்றப் பட்ட பிறகு, நாளை நடக்கும் ஒரு உயர் நிலை கூட்டத்தில், இவற்றைப் பற்றியெல்லாம் வந்திருக்கும் அதிகாரி விளக்கிக் கூற வேண்டும் என்று உள் நாட்டு அதிகாரி வேண்டிக் கொள்கிறார். ஆனால் தண்டனை விதிக்கப் பட்டவன் படுக்கும் போது, இயந்திரம் வேலை செய்யவில்லை. பலமுறை முயன்றும் அது எதாவது ஒரு பழுதால் நின்று விடுகிறது. வெறுத்துப் போய் அந்த அதிகாரி தாமே அதில் படுத்துக் கொண்டு தம் கையால் முதல் சக்கரத்தைச் சுற்றி விடுகிறார். ஒரு சில நிமிடங்கள் மட்டும் ஓடிய அதன் பாகங்களான பல சக்கரங்கள், ஒவ்வொன்றாகக் கழன்று விழுந்து விடுகின்றன. இறுதியில் அந்த இயந்திரத்தில் இருந்து விழ பாக்கி சக்கரம் எதுவும் இல்லை. அப்போது அவரைக் காப்பாற்ற, வந்திருக்கும் அதிகாரி முயல்கிறார். ஆனால் அதற்குள் அவர் உயிர் போயிருப்பதைக் காண்கிறார்.
அதன் பின்னர் வந்திருக்கும் அதிகாரி, தண்டிக்கப் பட்டவன் மற்றும் தண்டனையை நிறைவேற்ற உதவியாய் வந்தவன் எனத் தம்முன் இருக்கும் இரண்டு ராணுவ வீரர்களையும் அங்கே இருந்து போய் விடக் கூறித் தாமும் கிளம்புகிறார். அவர் பின்னே அவர்களும் வருகிறார்கள். ‘இவரை எங்கே நல்லடக்கம் செய்வார்கள்?’ என இவர் கேட்க அவர்கள் ஒரு ராணுவ உணவகத்தைக் காட்டுகிறார்கள். அதில் பல கூலி வேலை செய்வோர் தேனீர் அருந்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் மேஜைகளுள் ஒன்றின் கீழே சுட்டிக் காட்டுகிறார்கள் இருவரும். வந்திருக்கும் அதிகாரி அதை உற்றுப் பார்க்கிறார். அது தான் முன்னாள் ராணுவத் தலைமை அதிகாரியின் கல்லறை.
தமது நாட்டுக்குப் பயணிக்க அவர் ஒரு படகைப் பிடித்து, ஒரு கப்பலை அடைய முயற்சிக்கிறார். இந்த இரு ராணுவ வீரர்களும் அவருடன் பயணிக்க விரும்பினாலும், அவர் அதை ஏற்கவில்லை. அவர் சென்று விடுகிறார்.
ராணுவத்தில் இருப்போர் அதன் குரூரம் மற்றும் அடக்குமுறையில் எந்த அளவு மனம் வருந்தி அதில் பணி புரிகிறார்கள் என்பதையும், ராணுவம் பெருமையின் சின்னமாய்க் காணப்படும் போது இது அதன் மறுபக்கம் என்பதையும் சிறுகதையில் மையப் படுத்துகிறார் காஃப்கா. தன்னால் அந்தக் கொல்லும் இயந்திரத்தை இயக்க இயலவில்லை என்பதிலும் மரணமே பெரியது என முடிவு செய்யும் ராணுவ அதிகாரி. அதிகம் நினைவு கூரப் படாமல் புதைக்கப்படும் நிதர்சனம் இவை எல்லாம் ராணுவ பலம், ஆயுத பலம், யுத்தம் என சிந்திப்போரை சுயவிமர்சனம் செய்யத் தூண்டும்.
மேலும் வாசிப்போம்.