காஃப்காவின் படைப்புலகம் -10- The warden of tomb
காஃப்காவின் கற்பனை வளம், கதை சொல்லும் முறை, அவர் தேர்ந்தெடுக்கும் படைப்பு முறை (genre) இவை யாவுமே அவரது பன்முகத் தன்மை மற்றும் ஊற்றெடுக்கும் கற்பனை வளம் இவற்றுக்கான நிரூபணங்களாக இருக்கின்றன.
The warden of tomb என்னும் படைப்பு ஒரு நாடகம். நீளத்திலும் சிறியது. ஆனால் ஒரு புதிய ஆழ் நோக்கை அது முன் வைக்கிறது. ஒரு பிரிட்டிஷ் இளவரசர் தமது உதவியாளர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவரது கவனம் அன்றைய பொழுதில் மூதாதையர் கல்லறையின் ‘வார்டன்’ அதாவது நிர்வாகி பற்றியும் கவலையாய் இருக்கிறது. அங்கே என்ன பாதுகாப்பு தேவை என்பதே இளவரசரக்குப் புரியவில்லை. ஒரு பாதுகாவலனான காவலாளி இருக்கும் போது, ‘வார்டன்’ என்னும் நிர்வாகி எதற்கு என்றே அவர் வியக்கிறார். ‘வார்டன்’ வெளியே இருந்து உள்ளே வருவோருக்காக அல்ல, உள்ளே இருந்து வெளியே போகத் தவிக்கும் மூதாதையரைத் தடுப்பதே தம் வேலை என்று விளக்குகிறார். அறுபது மட்டுமே நிறையும் நிலையில் உள்ள அவர் உடல் நிலை மிகவும் பலவீனமாக இருக்கிறது. அவர் மூட நம்பிக்கைகளை வைத்திருப்பதாகவும், அவர் லாயக்கற்றவர் என்றும் இளவரசரின் நேரடி உதவியாளர்கள் கருதுகின்றனர். நேரடியாக அவருடன் பேச விரும்பும் இளவரசர், மூதாதையர் பற்றி ‘வார்டன்’ கூறுவதைப் புறம் தள்ளவில்லை. நம்பவுமில்லை. இளவரசர் அன்றாடப் பணிகளில் ஒரு பக்கம் அசட்டையாயிருக்கிறார்; மறுபக்கம் அவர் ஒரு புதிய நிர்வாக முறையைக் கட்டமைக்க விரும்புகிறார் என்று ஒரு உதவியாளர் மற்றொருவரிடம் அலுத்துக் கொள்கிறார்.
கல்லறை என்பது ஒரு குறியீடாக ஒரு நிறுவனம், உயர் அதிகாரத்தில் இருப்பவர்களையும் எந்த அளவு கட்டுப் படுத்துகிறது மற்றும் எந்த அளவு அதன் அடைப்பு மூச்சு முட்ட வைக்கக் கூடியது என்பதை நமக்குக் காட்டுகிறது. கல்லறையிலிருந்து அங்கே புதைக்கப் பட்டவர்கள் வெளியேற விரும்புவது, காலகாலமாக நாம் கொண்டாடி வரும் அதிகார அடுக்குகள் மற்றும் சமூகத்தின் முன்னுரிமைகள் எந்தத் தலைமுறைக்குமே சுதந்திர சுவாசத்தை அனுமதிக்கவில்லை என்பதை நமக்குக் காட்டுகிறது.
வித்தியாசமான, கூர்மையான படைப்பு.
மேலும் வாசிப்போம்.
(image courtesy:mensxp.com)