இந்தியாவில் எதுவுமே சரியில்லை , அமெரிக்காவில் எல்லாமே நன்றாக இருக்கிறது என்று நாம் முடிவு காட்ட வேண்டியதே இல்லை. நிறைய பிரச்சனைகள் இங்கே உண்டு. உதாரணத்துக்கு தனி நபர் துப்பாக்கி வைத்திருக்கும் விவகாரம் மற்றும் திறமைகளுக்கு பிற நாட்டின் மூளையை சார்ந்திருக்கும் நிலை. இவை தவிர என் கருத்தில் இங்கே உள்ள சீன ரஷிய மற்றும் இந்தியரை ஒப்பிட அமெரிக்கர்கள் படிப்பு மற்றும் கடும் உழைப்பு இவற்றில் ஆர்வம் குறைந்தோரே.
ஆனால் நாட்டின் சட்டத்தை மதிப்பதில் எல்லா மக்களும் , நிர்வகிப்பதில் அரசும் மிகவும் ஈடுபாடு உள்ளோர். அது இவர்களின் பெரிய பலம்.
சரி விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் தெருவைத் தோண்டும் தொழிலாளிக்கு எது எந்த நிறுவனத்தின் தொலை தொடர்பு இழை என்பதெல்லாம் தெரியாது. அவருக்கு தண்ணீர்க் குழாயை சரி செய்ய வேண்டும் என்றால் பிற இழைகளை வெட்டி விடுவார். அமெரிக்கத் தொழிலாளிகளுக்கும் இதே பிரச்சனை உண்டு. ஆனால் தெருவின் எந்த இடத்தில் நடைபாதையைத் திறந்து பராமரிப்பு செய்ய முடியுமோ அங்கே பல அம்புக்குறிகளையும் எண்களையும் இட்டு வைத்திருக்கிறார்கள். கீழே உள்ள குழாயிலும் அதே எண் இருக்கும். அதை மட்டும் தொழிலாளி தொட்டு சரி செய்தால் போதும். இந்த ஒழுங்கைச் செய்ய இயலும் மூளை கண்டிப்பாக இந்தியாவில் உண்டு. முனைப்புள்ள நிர்வாகம் இல்லை.