காஃப்காவின் படைப்புலகம் -14-The refusal
ஒரு நகர மக்கள் கூடும் ஒரு நிகழ்வை ஒட்டியே இந்தக் கதை பின்னப் பட்டுள்ளது. மையத்தில் இருந்து எல்லா நகரங்களுக்கான முடிவுகள் எடுக்கப் படும் ராணுவ ஆட்சி நடக்கும் நாடு அது. அந்த நாட்டில் நிர்வாகம் ராணுவத்தின் கையில் தான் இருந்தது. ஒவ்வொரு நகரின் நிர்வாகமும் ஒர் கர்னல் எனப் படும் ராணுவ அதிகாரியின் கீழ் இருக்கும். மக்கள் கூடும் கூட்டங்களில் அவர்களுக்கு எதிரே வந்து கர்னல் நிற்பார். பிறகு அவர் ஒரு கைகளிலும் மூங்கில் கழிகள் இரண்டை ஏந்திப் பிடித்தவராக நிற்பார். அதற்கான பொருள் சட்டப்படி அவர் நடப்பார் என்பதும் சட்டம் அவரைக் காக்கும் என்பதுமாகும்.
மக்கள் தமக்குள் ஓரிருவரைப் பேச்சுத் திறமைக்காகத் தேர்ந்தெடுத்து, அவர்களைக் கர்னல் எதிரே ஒரு சிறிய உரையின் வாயிலாக மக்களின் கோரிக்கைகளை கர்னல் முன் வைக்க வேண்டும் என முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் முதலில் வந்த ஆளோ கர்னல் எதிரில் நின்ற உடன் வாய் குழறி, கீழே கூட்டத்துக்குள் திரும்பவும் சென்று நின்று விடுகிறார். இரண்டாவதாக அவர்கள் மனதில் வைத்தவர் கர்னல் எதிரே வரத் தயங்குகிறார். மூன்றாவது ஆளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே நேரம் போகிறது. இதற்குள் முதலாவதாக வந்த ஆளே சற்றே மனதைத் தைரியப் படுத்திக் கொண்டு கர்னல் எதிரே வந்து நின்று, “இந்த வருடம் வரிகளை ரத்து செய்யுங்கள். மர வேலைக்கான மரத்தின் விலைகள் மிகவும் அதிகம். அதைக் குறைக்க நடவடிக்கை எடுங்கள் ” என்று கோரிக்கைகளை முன் வைக்கிறார். சிறிது நேரம் கழித்துக் கோரிக்கை நிராகரிக்கப் பட்டது என்று தகவல் அறிவிக்கப் படுகிறது.
கதையை முடிக்கும் போது காஃப்கா மக்கள் இந்தக் கோரிக்கையை முன் வைத்ததில் நிறைவு அடைந்ததையும் பதினேழு வயது முதல் இருபது வயது வரை உள்ள சில இளைஞர்கள் மட்டும் மனத்தில் நிறைவில்லாமல் இருக்கிறார்கள். புரட்சிகரமான சிந்தனைக்கும் மிகவும் கீழே பொருட்படுத்தக் கூட முடியாத ஒரு சிந்தனை யாருக்கேனும் தோன்றினால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை என்று குறிப்பிட்டு, கதையை முடிக்கிறார். இந்தக் கதையில் கர்னல் கையில் இருக்கும் இரண்டு கழிகள் சட்டம் மற்றும் கட்டுப்பாட்டின் இரு பக்கங்களைக் குறிப்பவை. ஒரு பக்கம் அது ஒரு சர்வாதிகாரத்தின் கைத்தடி. மறுபக்கம் உரிமைக் குரலை ஒடுக்கும் கைத்தடியும்.
கருத்துச் சுதந்திரம் பற்றி, அது பறி போவது மிகவும் பெருகி வருவது பற்றி ஒரு நூற்றாண்டு முன்பு காஃப்கா வேதனைப் பட்டார். இன்றும் பல நாடுகளில் கருத்துச் சுதந்திரம் என்று ஒன்று கிடையவே கிடையாது என்பதே சோகம்.
(image courtesy:inbridsundberg.com)