காஃப்காவின் படைப்புலகம் -16- Investigations of a dog
என்னும் படைப்பின் வடிவம் சாதாரணமான ஒன்றே. அதன் பின்னர் உள்ள ஒரு சிக்கலான சிந்தனைச் சித்திரம் காஃப்காவுக்கே கை வருவது. ஒரு நாய் இனி உணவுக்காகப் பாயாமல் அது தன் மேலே வந்து விழும் வரை காத்திருப்பது என்னும் முதல் பரிசோதனையை மேற் கொண்டு வெற்றியும் காண்கிறது. பிற நாய்களுடன் போட்டியிடாமல் காத்திருந்தே அதன் மேல் வந்து ஒரு உணவு, அது கவ்விக் கொள்ளும் விதமாகவே வந்து சேர்கிறது. இந்தப் பரிசோதனையின் ஊடே அதனால் பிற நாய்களின் உணர்வலைகளை ஒரு சங்கீதமாக உள்வாங்கிக் கொள்ளும் திறனைத் தனக்குள் கண்டடைய முடிகிறது. இந்தப் பரிசோதனையின் அடுத்த கட்டமாக அது உணவே இல்லாத ஒரு யாருமில்லாத காட்டுப் பகுதியில் தொடங்குகிறது. கிட்டத் தட்டக் குற்றுயிராக, அது சாவை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு வேட்டை நாய் எதிர்ப்படுகிறது. அது இந்த நாயை அங்கிருந்து அகன்று, நகரில் உள்ள பிற நாய்களுடன் சேர்ந்து கொள்ளும் படி வேண்டிக் கொள்கிறது. ஏனெனில் இந்த நாய் இருப்பதால், தன்னையும் மீறி, தன்னால் வேட்டை ஆட இயலவில்லை என்னும் கருத்தை அது முன் வைக்கிறது. அதை ஏற்று இந்த நாயும் அங்கேயிருந்து மீண்டு வந்து விடுகிறது.
இந்தப் படைப்பில் காஃப்கா தொட்டிருக்கும் புள்ளி மிகமிக நுட்பமானது. பொருளும், உணவும், சுகமும், புகழும் என்னும் மைய விழைவுகளின் கிளைகளாய் ஏகப்பட்ட தேவைகள் மற்றும் தேடல்கள். இவற்றை அடையும் போட்டிக்கென சில விதிகள் மற்றும் அவற்றை மீறிச் செல்லும் வெறிகள். இந்தச் சங்கிலித் தொடரோடு ஒட்டாமல் இருப்பவர்கள் இரு சாரார். ஒருவர் துறவைத் தடமாகக் கொண்டு மேற் செல்பவர். மற்றவரோ சிந்தனையாளர். அவர் எழுத்தாளராக இருக்கலாம். இல்லை சிந்தனையில் ஆழும் உந்துதலோடு நின்று விடலாம்.
ஆனால் மையக் கேள்வி வேறு. பசித்து உணவு தேடுவதை நாய்கள் எந்த அளவு தேவைக்கு அதிகமான போட்டியோடு செய்கின்றனவோ, அதே மனப்பாங்கு மனிதனிடமும் தனது அடிப்படைத் தேவைகளின் வரம்பு என ஒன்றைக் காணாமல் கண்மூடித்தனமாக எதையாவது துரத்துவதில் தென்படுகிறது. இந்தப் போட்டியில் மனிதன் எப்போதுமே சொரணையுடன் தனது வாழ்க்கையின் லட்சியமாக அல்லது மையமாக இவ்வளவு அற்பமான விஷயங்க்கள் இருக்க முடியாதே என்னும் கேள்வியை எழுப்புவதே இல்லை. பொருள் சார்ந்த சிந்தனையை நாம் மேற்கத்தியரிடம் பெரிதும் காண இயலும். அதிலிருந்து விலகிய இந்த காஃப்காவின் தடம் அரிதான ஒன்று.
(image courtesy: linesquotes.com)