காஃப்காவின் படைப்புலகம் -17 – A little woman
‘எ லிட்டில் உமன்’ என்பது சிறுகதை என்னும் வடிவத்தில் எடுத்துக் கொள்ளக் கூடியது. ஆனால் அது ஒரு இளைஞனின் ஒரு குறிப்பிட்ட கால கட்ட சிந்தனைத் தொடர். அவ்வளவே.
ஒரு இளம் பெண்ணைப் பற்றி ஒரு இளைஞன் தானே பல சிந்தனைகளைப் புரிந்து கொள்கிறான். அவளுடைய மகிழ்ச்சி, துன்பம் இவற்றை அவள் வெளிப்படுத்தும் போதெல்லாம் தனக்கு அதற்கும் தொடர்பில்லை என்றும், தொடர்பு இருந்தாலும் அது உலகின் கண்ணோட்டத்தில் தன்னைப் பற்றியே தவறான ஒன்றாகப் புரிந்து கொள்ளப் படும் என்றும் அவன் கருதுகிறான். ஒரு நண்பனிடம் இது பற்றிப் பேசப் போனாலோ அந்த நண்பனுக்கு இது வம்படிக்கும் ஒரு விஷயமாகவே தென்படுகிறதே ஒழிய, ஆழ்ந்து இவனது உணர்வுகளைப் புரிந்து கொள்ள அவன் முயல்வதே இல்லை.
இரண்டு மூன்று முறை வாசித்தாலும் காஃப்கா இதில் என்ன சொல்ல வருகிறார் என்பது வாசகருக்கும் மர்மமாகவே இருக்கும். காரணம் தனது மன ஓட்டத்தைக் குறிப்பிடும் அந்த இளைஞன், தானும் அந்தப் பெண்ணும் சந்தித்த, அல்லது உரையாடிய ஒரு தருணத்தைக் கூட நினைவு கூற மாட்டான்.
இந்த இடத்தில் தான் உண்மையில் கதையின் வீச்சு இருக்கிறது. காஃப்கா ஒரு பெண்ணிடம் இருந்து தள்ளி இருந்தாலோ அல்லது அவளது துணையாகவோ இருந்தாலோ , இரண்டுமே ஒன்று தான் என்னும் வித்தியாசமான ஒரு சிந்தனையை முன் வைக்கிறார். ஒரு ஆணின் உலகம் பெண் உலகிலும் மிகவும் அன்னியமானது. மறுபக்கம் பெண்ணின் மன ஓட்டங்கள் மிகவும் நுட்பமும் சிக்கலும் ஆனவை.
(image courtesy: quotationsof.com)