காஃப்காவின் படைப்புலகம் -18- The burrow
காஃப்காவின் ‘தி பர்ரொ” என்னும் சிறுகதையை நாம் புரிந்து கொள்வது மிகவும் கடினம் தான். ஒரு நூற்றாண்டுக்கு முன்பே மிகவும் வித்தியாசமான வடிவத்தில் எழுதப் பட்ட கதை அது. நவீன இலக்கியத்தின் தீவிர வாசகருக்கும் அது ஒரு சவாலே. எலி வளை என்பதே நாம் தலைப்புக்குத் தமிழில் செய்து கொள்ளும் அர்த்தமாக இருக்க முடியும். மிக நீண்ட அந்தக் கதையில், எந்த இடத்திலும் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் நபர் யார் என்பது காஃப்காவில் கோடிட்டுக் காட்டப் படவே இல்லை. இருந்தாலும் அது ஒரு எலி அல்லது பெருச்சாளியின் தரப்பு என்னுமளவு நாம் புரிந்து கொள்ளலாம். அது பொருந்தும்.
முதலில் நமக்கு Castle keep என்ற ஒரு கட்டிட அமைப்பு பற்றித் தெரிந்திருக்க வேண்டும். நம் மன்னர் காலக் கோட்டைகளின் உள்ளே இருக்கும் அரண்மனையில் இருந்து ஒரு சுரங்கம் அனேகமாக நதிக்கரை அல்லது காட்டில் சென்று முடியும் ஒன்றாக அமைக்கப் பட்டிருக்கும். அனேகமாக எந்த சுரங்கமும் இன்று நாம் சென்று பார்க்குமளவு பராமரிக்கப் படவில்லை என்றாலும் அத்தகைய சுரங்கப் பாதைகள் அமைக்கப் பட்டது உண்மையே. ஐரோப்பாவில் Castle keep என்பது கண்ணுக்குத் தெரியாமல் அரண்மனையின் பல்வேறு கட்டிடங்கள் வட்ட வடிவில் அல்லது செவ்வக வடிவில் இருக்க, ஒவ்வொரு கட்டிடத்தின் பின் பக்கத்துக்கும் பொதுவான ஒரு முற்றமான இடத்தில் செங்குத்தாகக் கட்டப் படும் ஒரு மறைவிடம் ஆகும். அது அவசர காலத்துக்கு ஏற்ற ஒரு பதுங்குமிடம். அது இருப்பது எளிதாய்ப் புலப்படாது. அதற்குள் நுழைவது ரகசியமான ஒரு பாதை வழியே மட்டுமே சாத்தியம்.
மூன்று முக்கியப் படிமங்கள் இந்தக் கதையில் உண்டு. முதலாவது Castle keep, இரண்டாவது வளை மற்றும் மூன்றாவது கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் பெருச்சாளி அல்லது எலி. மனித வாழ்க்கை பெரிதும் சகஜீவிகளுடன் நாம் இணையும் புள்ளிகளாலேயே உயிரோட்டம் மிக்கதாக இருக்கிறது. ஏனெனில் நம் மனம் பற்றிக் கொள்ளும் எல்லாப் பிடிமானங்களும் நம் சகஜீவிகள் மையமானவை. ஆனால் நாம் எதிரிகளாகக் காண்பது, நமக்கு ஆபத்து என்று நினைப்பது இவை யாவுமே அவர்கள் பற்றியது தானே. இந்த முரண் கிட்டத்தட்ட எல்லா இலக்கியங்களிலும் ஒரு சரடாக வெளிப்படவே செய்கிறது.
கதையின் முடிவில் ஒரு நாய் இந்த எலி வளைக்கு அதிக தூரமில்லாத இடத்தில் ஒரு குழியைத் தோண்டுகிறது. நமக்குத் தெரியும் – நாய் எப்போதும் ஒரு எலும்பைத் தேடிப் பெரிய பள்ளத்தைக் கூட மிக வேகமாகத் தோண்டி விடும். அந்த ஓசை இந்த எலிக்குப் பெரிய அச்சத்தைக் கொடுக்கிறது.
கதை முழுவதுமே ஒரு வளையில் இருக்கும் ஒரு எலிக்கு அந்த வளை முழுவதும் அழுகும் உணவு வகைகள் மற்றும் அதன் எச்சங்கள் எந்த அளவு சவாலானவை மற்றும் ‘கேசில் கீப்’ பை ஒப்பிட வளை எவ்வளவு இட நெருக்கடி உள்ளது என்பதெல்லாம் குறிப்பிடப் படுகின்றன. ஆனால் ஒரு எலிக்கு அதன் வளைதான் தன்னைப் பொருத்திக் கொள்ளும் உறைவிடமாக அமைந்து விடுகிறது. ஆனால் அதனால் வெளி உலகில் கண்டிப்பாக உலா வரவும் வேட்டையாடவும் மற்றும் உணவு தேடவும் இயலும்.
மன்னனுக்கே பதுங்குமிடம் தேவைப்படும். ஆனால் அவனோ மக்கள் அனைவரையும் காப்பவன். இந்த முரணும், நாம் பற்றிக் கொள்ளும் சகஜீவிகளோடு தான் நம் போராட்டங்கள் யாவும் என்பதும் ஆழ்ந்த சிந்தனையில் ஒரு நுட்பமான புனைவை காஃப்காவிடமிருந்து நமக்குத் தந்துள்ளது. அரிய படைப்பாளி அவர்.
image courtesy (quotes.thefamouspeople.com)