தமிழரின் தனித்தன்மை மிக்க அடையாளங்கள் – தடம் இதழில் கட்டுரை -2
ஆர்.பாலகிருஷ்ணனின் கட்டுரை மிகவும் செறிவாக நிறைய ஆதாரங்களோடு எழுதப் பட்டது. சிந்து சமவெளி நாகரிகம் தமிழரின் நாகரித்திலிருந்து அன்னியமானது அல்ல. அங்கே உள்ள பல இடங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயர்கள் என அவர் பதிவு செய்கிறார். இன்று ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள பல இடங்களின் பெயர்கள் தமிழ்ப் பெயராகவோ அல்லது சற்றே திரித்தோ இருக்கின்றன என ஒரு வரைபடம் தடம் இதழில் கட்டுரையுடன் வெளியிடப் பட்டிருக்கிறது.
இலக்கியங்களில் அதுவும் சங்க கால இலக்கியங்களில் வெளி மாநிலங்களாக இன்று இருக்கும் நிலங்கள் பற்றிய துல்லியமான பதிவுகள் எப்படி வந்திருக்க முடியும்? பல மேற்கோள்களைப் பாலகிருஷ்ணன் சுட்டிக் காட்டுகிறார். நகரங்களின் அமைப்புக்குப் புகழ் பெற்றது சிந்து நாகரிகம். பத்துபாட்டில் ‘மதுரைக் காஞ்சி’ மற்றும் ‘பட்டினப்பாலை’ என்னும் தலைப்புகள் நகர உருவாக்கம் தமிழகத்தில் மிகவும் ஊன்றி இருந்ததையே காட்டுகிறது. பெண்ணின் அழகை நகரத்தின் அழகுடன் ஒப்பிட்டு வர்ணிக்கும் சங்க இலக்கியங்களும், பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் என்னும் சிலப்பதிகாரப் பதிவும் அவரது வாதத்துக்குச் சான்றுகள் ஆகின்றன. இமையத்தின் உச்சியில் வாழும் யாக் என்னும் விலங்கை வடமொழி இலக்கியங்களே குறிப்பிடாத போது சங்க இலக்கியங்களில் எப்படி அதன் குறிப்பு கவரிமா என்று வந்தது. குஜராத்தில் கட்ச் கழிமுகம் ஒன்றில் மட்டுமே கழுதைகளின் காலை சுறா கடிக்கும் வாய்ப்பு உண்டு. அது எப்படி சங்க இலக்கியங்களில் பதிவானது? வைகைக் கரையில் அகழ்வாய்வில் காணப் பட்ட நகர அமைப்பும் சிந்து சமவெளி நகர அமைப்பும் நிறைய ஒற்றுமைகள் உள்ளவை. சிந்து மக்கள் என்ன ஆனார்கள்? ‘வேறு இடங்களுக்குக் குடி போய் விட்டார்கள்’ என்கிறது ‘தைத்ரிய பிராமணம்’ (11.4.6.8) என்பதையும் குறிப்பிடுகிறார் பாலகிருஷ்ணன்.
வெற்றுப் பெருமை பேசாமல் விரிவான ஆதாரங்களுடன் அமைந்த கட்டுரை பாலகிருஷ்ணனுடையது.
2016ல் மதுரை அருகே கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சி நிறுத்தப் பட்டு விட்டது. இதனால் நட்டம் உண்மையை அறியவும் துல்லியமான பண்பாட்டுச் சான்றுகளை அடையவும் விரும்பும் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கே.
(image courtesy:youtube and puthiyathalaimurai)