வாழ்க்கையின் ரகசியம் – 1
வாழ்க்கையின் ரகசியம் என்று ஒன்று உண்டா? இந்தக் கேள்வியை முதலில் கடந்து விடுவதே நல்லது. வாழ்க்கையைத் தவிர்த்த எதுவுமே அத்தனை புதிராக இல்லை. வாழ்க்கை மட்டுமே ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வடிவில் நம்முடன் கை கோர்க்கிறது. அந்த வடிவங்கள் நமக்குப் பிடித்திருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். வாழ்க்கை ஏன் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருக்கிறது? புரிந்து கொள்ள முடியாத ஒன்றா அது இல்லை அதைப் புரிந்து கொள்ளும் திசையில் நாம் இல்லையா? வாழ்க்கை என்னும் சவாலும் புதிரும் நம்மால் வாழ்வதை அதன் நுட்பத்தை அந்த ரகசியத்தை அவதானித்துப் புரிந்து கொள்ள நம்மை அனுமதிப்பதே இல்லையா?
அடுத்து கடக்க வேண்டிய கேள்வி இதை மத குருமார்கள் அல்லது நவீன ஆசான்கள் தவிர்த்த ஒரு சாதாரண மனிதன் சிந்தித்து அது பற்றி எழுதலாமா? இந்தக் கட்டுரைத் தொடர் உபதேச மாலையா இல்லை சிந்தனைத் தடத்தின் ஒரு எழுத்து வடிவமா?
இன்று படித்த மற்றும் மாத சம்பளம் வாங்குகிற ஒரு கூட்டத்தை மட்டுமே குறி வைத்து உபதேசங்கள் மற்றும் வழி காட்டுதலுடன் பல ஆசான்கள் , குருமார்கள் களத்தில் இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் போலிகள் என்றோ, கடுமையான மன அழுத்தமும் வேலைப் பளுவும் உள்ள மூளைப் பணியாளர்களுக்கு யாருமே ஆறுதல் கூறக் கூடாது என்றோ நான் கருதவில்லை. மறுபக்கம் நாம் ஒரு மத அல்லது ஆன்மீக அடிப்படையில் மட்டுமே வாழ்க்கையின் ரகசியத்தைப் பார்க்க வேண்டுமா என்னும் கேள்விக்கும், ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையின் ரகசியம் பற்றி எழுதக் கூடாதா என்னும் கேள்விக்கும் என் பதில் தேவையில்லை என்பதே.
வாழ்க்கையை மிகவும் தீவிரமான கண்ணோட்டத்தோடு பார்த்தே நாம் பழகி விட்டோம். வாழ்க்கையின் மிகவும் ஆழமான பொருளைத் தோண்டி எடுக்க ஒரு சாதாரணமான மனிதனுக்கு சாத்தியமாகவே இருக்க வேண்டும். அந்தப் புரிதல் ஆன்மீகவாதிகள் முன் வைக்கும் உறைகல்லில் தேறா விட்டால் என்ன? வாழ்க்கை என்பதை அலச நிறையவே தேவை இருக்கிறது. இது மற்றுமொரு முயற்சி. அவ்வளவே.
வாழ்க்கையின் ரகசியம் பற்றித் துவங்குவதோ அல்லது வாழ்க்கை பற்றி எதை எழுதினாலுமோ நாம் கொண்டாட்டங்களுக்கு மனித வாழ்க்கையில் உள்ள இடத்தை மறுக்கவே முடியாது. கொண்டாட்டங்களால் நாம் சமூக வாழ்க்கையையும் தனி மனித வாழ்க்கையையும் நிறைத்து வைத்திருக்கிறோம். வருடாந்திரக் கொண்டாட்டமா அல்லது ஒரு மைல் கல்லை எட்டிய கொண்டாட்டமா அல்லது ஒரு தனி நபரைக் கொண்டாடும் அல்லது அவரது வாழ்க்கையின் வெற்றி ஒன்றைக் கொண்டாடும் விதமானதா என்பதை நாம் மையப் படுத்தி அதில் இருந்து விரிந்து வாழ்க்கையின் ரகசியத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
வாழ்க்கையில் ஒரு தனி மனிதனால் தனியே ஒரு கொண்டாட்டத்தை நடத்த முடியாது. குறைந்த பட்சம் குடும்பம் அல்லது நட்பு அல்லது அலுவலக சமூகம் அல்லது பெரிய சமூகமான ஊர் அல்லது உலகமே கொண்டாடும் போது தானும் கொண்டாடுவது என்பதே ஒரு தனி மனிதன் எதையும் கொண்டாட வழியில்லை.
கொண்டாட்டத்தின் பலவேறு பரிமாணங்களை நாம் விவாதிக்கும் போது நாம் தனி மனித வாழ்க்கை மற்றும் சமூக வாழ்க்கை மற்றும் தனி மனிதனின் வாழ்க்கை பற்றிய தேடல் மற்றும் சமூகத்தின் தேடல் மற்றும் வாழ்க்கையின் ரகசியம் எதில் இருக்கிறது என்பது பற்றியும் ஒன்றாகச் சிந்திப்போம். (தொடரும்)
image courtesy:pexels.com