கொண்டாடும் தருணங்கள்
ஒரு குழு, ஒரு அமைப்பு அல்லது ஒரு சமூகம் எந்தெந்தத் தருணங்களைக் கொண்டாடுகிறது என்பது அதன் மனப்பாங்கை அடையாளப் படுத்துகிறது. குழுக்கள், அமைப்புகள் மற்றும் சமூகத்தின் வெவ்வேறு வர்க்கம் மற்றும் அதிகாரக் கூட்டணிகள் வெவ்வேறான தருணங்களைக் கொண்டாடுகின்றனர்.
மதம் என்பதும் மதம் கட்டாயப் படுத்தும் பண்டிகைகளையும் எல்லா மதத்தவரும் கொண்டாடுகிறார்கள்.
இளைஞர்களில் ஆண்கள் தம் தனிப் பட்ட சாதனைகளையும் பெண்கள் தன் குடும்ப வாழ்க்கையின் முக்கிய தருணங்களையும் கொண்டாடுகிறார்கள்.
அமைப்புகள் தம் அடையாளத்தை நினைவு படுத்தவும் நிலை நிறுத்திக் கொள்ளவும் தேர்ந்தெடுத்த தலைவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுகின்றன.
நடு வயது ஆண் மது அருந்த உடனிருக்க யார் ஒப்புக் கொண்டாலும் ஒரு கொண்டாட்டத்துக்குத் தயார்.’
நடு வயதுப் பெண் தனது பொருளாதார அளவு கோலில் பொருந்தும் எந்தத் தோழியுடனும் உடை, உணவு மற்றும் சுற்றுலாவைக் கொண்டாடத் தயார்.
இருந்தாலும் இவற்றுள் ஊடாடும் சரடு இது தான். ஒரே போல இருக்கும் வர்க்கம் (ஏழை, நடுத்தர மற்றும் உயர் வருவாய்) தனக்குள் சாதாரணமாக அல்லது பொதுவான நிறைகள் உள்ளவர்களைச் சேர்த்துக் கொண்டு கொண்டாட விரும்புகிறது. அதாவது உடல் அல்லது மனம் பாதிக்கப் பட்டவர்களுக்கோ அல்லது அவரது குடும்பத்தாருக்கோ அதில் பங்கேற்க வாய்ப்பில்லை.
திருமணம் என்பது இந்த வர்க்கத்தின் எல்லைக் கோடுகளைக் கடந்து எல்லோரையும் ஒன்றாகக் காட்டி எனக்கு கும்பல் அதிகம் என்னும் பறைசாற்றுதலுக்குப் பெரிய ஒரு தருணமாக அமைகிறது. இந்த இடத்தில் திருமணம் என்னும் பந்தத்தில் இணையும் இரண்டு குடும்பங்கள் தனித்த மற்றும் கூட்டான பெருமைக்காக இதைச் செய்கின்றன.
எனவே வாழ்க்கையின் ரகசியம் என்பது தனிமனித வாழ்க்கையின் ரகசியம் ஆக இருந்தாலும் அது கூட்டத்துக்குள் எங்கே நாம் பொருந்திக் கொள்கிறோம் என்பதில் தான் அடையாளப் படுகிறது.
தருணங்கள் நமக்கு நம்மை அடையாளப் படுத்துகின்றன. ஆனால் கொண்டாடத் தருணம் இல்லாதவர்கள் வாழ்க்கையின் இனிமையான பகுதி மறுக்கப் பட்டவர்களே. அதில் ஐயமே இல்லை. ஏனெனில் என் அடையாளம் எனக்கு வெளியே என்னைச் சுற்றியுள்ள சமூகத்திடம் தான் இருக்கிறது.
நான் என்று ஒன்று தனியே இருக்கிறேனா? இந்தக் கேள்வி ஆன்மீகம் ஆனால் ரமணரின் வழியில் போக வேண்டும். ஆனால் நாமோ வெகுஜன வாழ்க்கையின் ரகசியம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.
எனவே நான் என்ற ஒருவன் தனியே இல்லையென்றால் என்னை நான் அடையாளப் படுத்திக் கொள்ள கைகோர்த்துக் கொண்டாடும் கூட்டம் ஒன்று எனக்கு வேண்டும்.
அதில் இந்த ரகசியத்தின் ஒரு முக்கிய அம்சம் பிடிபடும்.
(image courtesy:stylewhack.com)
மேலும் சிந்திப்போம்.