வாழ்க்கையின் ரகசியம் -8
உடனடி கவனம் பெறும் காலம்
எந்த ஒரு தீவிர நடவடிக்கையும் உடனடி கவனம் பெறும் நோக்கத்துடன் தான் செய்யப் படுகிறது. கவனப் படுத்துவதில் அந்த நபர் வெற்றி அடைகிறாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் நோக்கமெல்லாம் ஒரு கவனத்தை, தனது செயலில் தனது தீவிரம் மற்றும் விசுவாசம் மற்றும் திறமை வெளிப்பட்டது என்பதைப் பிறர் (அவர்களுள் குறிப்பாகத் தன்னுடன் பணியில் இணைந்திருக்கும் ஒருவர்) கவனிக்க வேண்டும் என்பதே.
யாருமே கவனிக்காத அல்லது கவனிக்கும் உத்திரவாதம் இல்லாத ஒன்றைச் செய்தால் எந்தக் கொண்டாட்டத்தில் தான் இருப்பதோ அல்லது தன்னை யாராவது கொண்டாடுவதோ இரண்டுக்குமே வழியில்லை. இந்த ஒற்றை வழிகாட்டுதலே உந்துதலாய் அரசியல்வாதி முதல் குடும்பத்துக்குள் இருப்போர் வரை எல்லோருமே இயங்குகிறார்கள்.
எல்லா வயதிலும் எல்லாக் காலத்திலும் இது நடக்காது. எல்லா விதமான வேலைகளிலும் அதில் எல்லாப் பொறுப்புகளிலும் அது கிடைக்காது. கவனம் பெறாதவர் அதிகாரத்தை அடையப் போவது கனவே. எனவே தான் கவனம் பெறுமளவான பொறுப்பு அல்லத் வேலையை கவனங்களைக் கவரும் வண்ணம் தான் செய்யும் தகுதி உள்ளவரை ஒருவர் முயல்கிறார்.
ஏற்கனவே கவனம் பெற்றோருடன் இணைந்து கவனம் பெற்றாலோ அல்லது தனியே கவனம் பெற்றாலோ பின்னாளில் அதிகாரத்தைக் கைப் பற்றும் ஆசையில் முன்னேற்றம் இருக்கும். தலைமையில் இருத்தலும் அதிகாரத்தின் ஒரு குறியீடாக இருப்பதும் வெவ்வேறு.
வாழ்க்கையின் ரகசியம் எதை யார் எதற்காகச் செய்து எப்படி கவனம் பெற்றார்கள் என்று அறிந்து அதைத் தன்னாலும் செய்ய முடியுமா என சுய விமர்சனம் மற்றும் சீர் தூக்கல் செய்து கொள்வதில் இருக்கிறது.
ஒரு சாதனை என்பது கவனம் பெற்ற வெற்றி. கவனம் பெறாத வெற்றிகள், கவனம் பெறாத சாதனைகள் நிறையவே உண்டு.
மேலும் சிந்திப்போம்
(image courtesy:123rf.com)