வாழ்க்கையின் ரகசியம் -9
நீண்ட காலம் என்று ஒன்று உண்டா?
இது என்ன கேள்வி என்று தோன்றலாம். உண்மையில் இது சூழ்நிலைகளுக்கு ஏற்ப பதில் மாறும் கேள்வி. அரசியல்வாதிகள், வணிகர்கள், சமூகத்தில் புகழில் அல்லது செல்வாக்கில் முந்த விரும்புவோர் யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்களது நடவடிக்கைகள் நீண்ட காலம் என்று ஒன்று இல்லை என்பது போலவே இருக்கும்.
மனித உறவுகள் பற்றிய அக்கறையில்லாத சமகால பலன் அல்லது உடனடி லாபம் பற்றிய குறிக்கோளோடு இயங்குவது என்று சர்வ சாதாராணமான ஒன்று. நீண்ட காலம் என்று ஒன்று உண்டா என்ற கேள்வியே அனேகமாக எழுவதில்லை. எல்லாமே உடனடி பலன் அடைவதிலேயே கவனம் பெறுகின்றன.
வாழ்க்கையின் ரகசியம் இந்த அவசரத்தில் ஒருவர் இணைகிறாரா இல்லையா என்பதில் மட்டுமல்ல, குறுகிய காலமே இலக்குகளை நிர்ணயிப்பது நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டே செல்கிறது. இன்று என் அவசரம் இன்று என் தீவிரம் இன்று என் கண்மூடித்தனம் பல காலங்களுக்குப் பல துறைகளில் பின்னடைவை விளைவிக்கக் கூடியதே. ஆனால் அதெல்லாம் நமக்கு ஒரு பொருட்டே அல்ல. ஏனெனில் இன்று நாம் பந்தயத்தில் முதல் இடம் பிடிக்கிறோமோ இல்லையோ முந்துகிறோமோ இல்லையோ குறைந்த பட்சம் பந்தயத்தில் இருந்தே தீர வேண்டும். இல்லையென்றால் காலமானவர்களுக்கும் நமக்கும் இடையே எந்த வித்தியாசமும் இருக்காது.
எந்தப் பின்னணி இருந்தாலும் என்ன தகுதி இருந்தாலும் எந்த அளவு மனதில் பக்குவம் இருந்தாலும் குறுகிய கால பலன் களால் அலைக்கழிக்கப் படாதவர்கள் அனேகமாக இல்லை என்றே கூறி விடலாம்.
அசலான ஒன்று அங்கீகாரமும் கவனமும் பெற மிக நீண்ட காலமாகலாம். அசலான சிந்தனை, கற்பனை, புதிய வழித்தடம், புதிய தீர்வு இவைகளே பல துறைகளில் திருப்பு முனையாக இருக்கின்றன. ஆனால் நீண்ட காலக் கண்ணோட்டத்துடன் பொறுமையுடன் சிந்திப்போருக்கு மட்டுமே அந்தத் தடம் திறக்கும். ஆனால் அவசர கதியில் பந்தயத்தில் ஒரு இடத்தைப் பிடிக்கும் வேகத்தில் பலியாவது புதிய சிந்தனை. மாற்று வழி. புதிய தடம். புதிய கற்பனை. அசலான ஒரு பொறி.
இதையும் மீறிச் செல்லும் மன வலிமையும் தன்னம்பிக்கையும் உள்ளவர்கள் உண்டா? அவர்கள் வழி என்ன?
மேலும் சிந்திப்போம்.
image courtesy: gettyimages