வாழ்க்கையின் ரகசியம் -10
நிஜத்தை நிர்ணயிக்கும் கனவுகள்
இது வரை நாம் திரும்பத் திரும்ப நாம் கொண்டாடுவது அல்லது முக்கியத்துவம் பெறுவது அல்லது அதிகாரம் மிக்க அடையாளத்துடன் ஒட்டிக் கொள்வது இவை பற்றியே நிறையவே பார்த்தோம்.
அதை நிறையவே அழுத்தமாகச் சொல்ல வேண்டி இருந்தது. ஏனெனில் அது தான் சமூகம் மற்றும் அதனுடன் நாம் ஒன்றிணைந்து இயங்க ஒரே வழி. அதுவே நாம் நிஜம் என்று நம்புவது. அதுவே நம் அந்தஸ்து மற்றும் கௌரவம் சம்பந்தமான நிஜம்.
ஆனால் நிஜம் என்பது அவ்வளவு மலினமானதா அல்லது வேறு பரிமாணங்கள் அற்றதா? இல்லையே நிஜ உலகம் என்பது நாம் மற்றவர் மத்தியில் பெருமிதமாக இருப்பது மட்டும் அல்ல.
நிஜம் என்பது நாம் இன்று வாழும் வாழ்க்கைக்கு (அன்றாட வாழ்க்கை மற்றும் ஆன்மீகம்) அடிப்படையான பலவற்றைக் கொண்டது. நாம் அனுபவிக்கும் எல்லா வசதிகளும் நாம் மனம் தளரும் போது நமக்கு வழி காட்டும் நன்னெறிகளும் நிஜத்தின் மிக முக்கியமான அங்கங்களே. அந்த நிஜம் பெயர் தெரியாமலே போனவர்களின் பல கனவுகளால் கற்பனைகளால் இன்று நிஜமானவை.
மடிக்கணினியைக் கண்டு பிடித்தவர் யார்? இணையத்தின் மூல வடிவத்தை முதன் முதலில் வடிவமைத்தவர் யார்? பென்சிலினைக் கண்டு பிடித்தவர் யார்? ரமண மகரிஷி மற்றும் சில சித்தர்களை நமக்குத் தெரியும். தமிழ் நாட்டில் மற்றும் பிற மாநிலங்களில் உருவான ஆன்மீக குருமார்கள் யார்? பெயர் தெரியாமலேயே சுதந்திரப் போரில் தம் இன்னுயிறை ஈந்தவர்கள் எத்தனை பேர்? மரங்களை நட்டு வளம் சேர்த்து வருவோர் எத்தனை பேர்? அவர்களின் பெயர் கூட நமக்குத் தெரியாது. கவிதை, இலக்கியம், நாடகம், நாட்டுப் புறக் கலைகள், நடனம் மற்றும் ஒவியம், சிற்பம் என பண்பாட்டுக்கு ஆதாரமான எத்தனை பேரை நமக்குத் தெரியும்?
நீண்ட காலம் சமூகம் நன்மை பெறும் கனவைச் சுமந்தோர் எண்ணற்றோர். அவர்களை நாம் அறிந்து கொள்ளவோ அவர்களின் நினைவாக எதையும் செய்யப் போவதோ இல்லை. இன்றைய சமூகம் இன்னும் வலிமையானதாக, இன்னும் வளமானதாக இன்னும் பண்பாட்டில் சிறந்து விளங்குவதாக மாற வேண்டும் என்னும் கனவை அவர்கள் சுமந்தார்கள். மாற்றம் தேடும் கனவால் அவர்களின் கற்பனை ஊற்றெடுத்தது. விஞ்ஞானம், இலக்கியம் மற்றும் கலைகளில் கற்பனையே கனவே ஒரு காலத்தில் நம்ப முடியாத ஒன்றை, இல்லாத ஒன்றைப் பின்னாளில் நிஜமாக்கியது.
நிஜத்தை நிர்ணயிப்பது கனவுகள் தான். கனவுகளைச் சுமப்பவர்களுக்கு அந்தக் கனவே , அதன் புதுப் புது சாத்தியங்கள் மற்றும் வடிவங்களே உலகம். அவர்களுக்கு சமூகத்தில் ஒரு இடம், கொண்டாட்டங்கள் வழி ஒரு அதிகாரம் அல்லது அந்தஸ்து தேவைப் படுவதே இல்லை. அவர்கள் தம் உலகில் இடையாறாது இயங்குவதாலேயே நம் உலகம் செழிப்புற்றது.
கனவுகளின் மகத்துவம் என்ன?
மேலும் சிந்திப்போம்.
(image courtesy:indianartworksblog.wordpress.com)