வாழ்க்கையின் ரகசியம் -12
மனிதக் கூட்டங்களை அல்ல – மனித வாழ்க்கையை பாதித்தவர்கள்
அசலான கனவைக் கருக் கொண்டு அதற்காக உழைத்தவர்கள் மனிதர்களை, அதாவது தனி மனிதர் அல்லது கூட்டங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது பின்னால். அல்லது அது நேரடியாக நிகழாமற் கூடப் போயிருக்கலாம். மனித வாழ்க்கை மீது அவர்கள் பாதிப்பை ஏற்படுத்தினார்கள். .
இந்திய தேசம் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலையாக வேண்டும் என்று மகாத்மா காந்தி தவிர லட்சக் கணக்கானோர் கனவு கண்டு உழைத்தார்கள்.
தமிழ் நாட்டில் வைத்திய நாத ஐயர், பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் கேரளாவில் நாராயண குரு ஆகியோர் தலித்துகள் ஆலேயப் பிரவேசம் செய்ய முன்னோடிகளாய் உழைத்தார்கள். அந்தக் கனவை நனவாக்கினார்கள்.
அபினவ் பிந்திரா துப்பாக்கி சுடுதலில், மல்லேஸ்வரி பளு தூக்குவதில் மற்றும் சிந்து மற்றும் சைனா நெக்வால் இறகுப் பந்து விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இன்னும் பலர் ஏஷியாட் மற்றும் ஒலிம்பிக் கனவுகளுடன் பல கோடி இந்தியரின் கனவை நனவாக்கியவர்கள்.
ஏழைக் குழந்தைகள் ஒரு வேளையேனும் உணவு சாப்பிட்டுப் பள்ளிக்கூடமும் போக வேண்டும் எனக் கனவு கண்டார் காமராஜர்.
தமிழ் இலக்கியம் நவீனத்தில் மிளிரும் கனவும் புதுமைப் பித்தனுக்கும் அசோகமித்திரனுக்கும் இருந்தது.
ஆன்மீகத்தின் ஆழத்தைக் காணும் கனவு ரமணருக்கும் அரவிந்தருக்கும் இருந்தது.
இந்தியா விண் வெளியில் சாதிக்கும் கனவு அப்துல் கலாமுக்கு இருந்தது.
குஷ்டரோகிகளின் நல வாழ்வு அன்னை தெரஸாவின் கனவு.
இவர்கள் தனி மனித கூட்டத்தைப் பாதிக்கவில்லை. அவர்கள் பெயர் சொல்லும் அமைப்புகளின் அங்கத்தினரின் எண்ணிக்கையும் குறைவே. ஆனால் இவர்கள் மனித வாழ்க்கையின் திசையை அதன் சுயநல பிம்பத்தை மாற்றிக் காட்டினார்கள்.
பல தலைமுறையினர் அவர்களால் ஊக்கம் பெற்று புதிய தடங்களில் அணி வகுக்கும் வண்ணம் மனித வாழ்க்கையின் மீதே தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். கனவுகளே நம் நிஜத்தின் எல்லைக் கோட்டை விரிவாக்குபவை. கனவு காண லட்சிய மனதும் மற்றும் சுதந்திர சிந்தனையும் ஊற்றெடுக்க வேண்டும்.
தனி மனித வெற்றி முனைப்பால் அமைந்து விடும். சமுதாயம் இன்னும் மேலான இடத்தை எட்டும் கனவைச் சுமப்பவர்கள் பெயரில் கொண்டாட்டங்கள் இல்லை. தம்மைக் கொண்டாடத் தம வாழ் நாளில் அவர்கள் முனையவே இல்லை. அவர்கள் கவனமெல்லாம் இன்னும் சிறப்பான சமுதாயம், இன்னும் புகழான இந்தியா, இன்னும் வலிமையான இளைஞர் கூட்டம் இவையாகவே இருந்தது.
இவர்கள் வாழ்க்கையில் எதை உயர்வாகக் கருதினார்கள்/ எந்தப் புள்ளியில் இவர்கள் கனவே நிஜத்தை விடவும் காதலுக்கு உரியது என்று உணர்ந்தார்கள்? மனித வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவை என்ன என்று இவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்?
மேலும் சிந்திப்போம்