தன் பாதையில் தெளிவுள்ளவர்கள்
வெற்றி, தோல்வி என்பதை வைத்து ஒரு பயணம் நமக்குத் தந்த ஊக்கம், ஆற்றல், பாடம் மட்டும் உயிர்ப்பான நிமிடங்கள் முடிவாவதில்லை. தன்னை இயக்கிய கனவு தந்த அந்த உயிர்ப்பான தருணங்கள் ஒரு மனிதனை மேலும் ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்கின்றன.
கனவு எப்போது பாதையைத் தெளிவாகக் காட்டும்? எப்போது அது சமூகத்துக்கே பயன்படும் கனவாக இருக்கிறதோ அப்போது மட்டுமே. கலை. இலக்கியம், அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த கனவுகள் தனதளவில் பலன் தருவதானால் மனதில் விடுதலை மிக்க ஒரு கற்பனை உருவாவதே இல்லை. புதிய தடங்களும் கண்ணில் தென்படுவதில்லை. பிறருக்கும் அது போய்ச் சேரும் என்னும் போதே புதிய சாளரங்கள் திறக்கின்றன.
ராக்கெட் தொழில் நுட்பம் மட்டுமே செய்து கொண்டிருந்த அப்துல் கலாமின் கனவுகள் அதையும் தாண்டி விரிந்த போது கால் ஊனமுற்றோருக்கு இயக்க லேசான செயற்கைக் கால்களை உருவாக்கினார்.
பிறர் நலனுக்காகத் தான் முழு மூச்சுடன் இயங்கும் போது பாதையில் தெளிவு பிறக்கிறது. பாதையில் தெளிவுள்ளவர்கள் அந்தப் பயணம் தனக்கு என்றும் நினைவு கூரத் தக்கதாய் என்றும் வழி காட்டுவதாய் மற்றும் தன்னை இன்னும் மேம்பட்ட நிலைக்கு இட்டுச் செல்வதாய் பொது நலக் கனவைச் சுமப்பவர் காண்கிறார்.
தன் பாதையில் தெளிவுள்ளவர்கள், பிறர் நலனையும் பேணுவதில் தீர்மானமுள்ளவர்கள் தனது பயணத்தின் உயிர்ப்பு மிகு தருணங்களால் தான் மட்டும் மகிழ்வதில்லை. அவர்களது தெளிவு பிறரையும் ஈர்க்கிறது. சூழலே ஒளி பெறுகிறது.
வாழ்க்கையின் ரகசியம் மனிதன் தனியே வாழ தனியே தன்னலம் காணப் பிறக்கவில்லை என்பதே.
இவ்வளவு தானா வாழ்க்கையின் ரகசியம்? இத்தனை எளிதானதா? அது ஏன் இவ்வளவு புதிராய் இருக்கிறது?
மேலும் சிந்திப்போம்.
(image courtesy:dreamstime.com)