வாழ்க்கையின் ரகசியம் -16
வெற்றிக்கான விலையும் வெற்றி என்னும் தண்டவாளமும்
வாழ்க்கையின் ரகசியம் என்பது மனிதன் தன்னலம் மற்றும் தன் துய்ப்பு இவற்றை ஒட்டியே வாழ்வதற்காகப் பிறக்கவில்லை என்பதே. ஆனால் அது ஏன் இத்தனை சிக்கலாக இருக்கிறது? இந்த ரகசியத்தைப் புரிந்து கொண்டதும் உடனே நம்மால் எதை எதை மாற்ற முடியாது?
1. எந்த அமைப்புக்குள்ளும் குடும்பம், நிறுவனம், கட்சி, அரசு, சமூகம், நாடு, உலக நாடுகள் என எங்கெங்கும் தனி மனிதனின் அல்லது குழுவின் தன்னலம் தரும் உந்துதலே ஏன் ஆர்ப்பரிக்கிறது?
2. நீண்டகாலப் பொறுப்புணர்வுடன் பணியாற்றுவோர் ஏன் மிகவும் குறைவாகவே தென்படுகிறார்கள்?
3. அடுத்த தலைமுறைக்கு ஒரு நல்ல சுற்றுச் சூழல், ஒரு நல்ல ஆட்சி, ஒரு மனித நேயம் மிக்க சமூகச் சூழல் என்னும் கனவு ஏன் அனேகமாகத் தென்படுவதே இல்லை?
4. நல்லவர் யார்? எந்த வம்புக்கும் போகாமல் தானுண்டு என்று இருப்பவரா? தன்னைத் தாண்டி சிந்தித்து சமூகத்து ஏதாவது செய்யும் முனைப்பு உள்ளவரா?
5. சட்டங்கள் ஏன் காகிதப் புலிகளாகவே நின்று விடுகின்றன?
6. இவைகளோடு மிகப் பெரிய தனித்த ஒரு கேள்வியையும் சேர்த்துக் கொள்ளலாம் எது வெற்றி?
எது வெற்றி? என்னும் கேள்வி எதற்கு? நாம் இன்று வெற்றியாளர் என்று கொண்டாடுவோர் எல்லாத் துறைகளிலுமே கவனம் பெற்றவர் மட்டுமே. அவர் எந்த அளவு சமூகத்தின் வெற்றி பற்றிய கனவைச் சுமந்தார் என்பது நமக்குக் கிடைக்காது. நாமே கண்டு யூகிக்கும் கவனம் நம்மிடம் கிடையாது. ஒரு எளிய உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். கிரிக்கெட் விளையாட்டில் ஒருவர் தனியாக சாதித்தது உடனே கொண்டாடப் படும். ஆனால் தனது தனி சாதனை இலக்குகளைத் தாண்டி அணி வெற்றி பெறுவதற்கான கவனத்துடன் மட்டுமே ஈடுபாடு காட்டியவரை அடையாளம் காட்டும் கிரிக்கெட் நிபுணர் நம்மிடையே இல்லை. கபில் தேவ் அப்படிப்பட்ட ஒருவர் என்னுமளவு இதை நிறுத்திக் கொள்கிறேன்.
வெற்றி என்பது கொண்டாட்டங்களில் பங்கெடுத்துத் தனக்கும் ஒரு கொண்டாட்டத்தை உறுதி செய்கிற ஒரு ஆளை உதாரணமாக்குவதாகவே இருக்கிறது.
தன்னைத் தாண்டி வரும் தலைமுறை மற்றும் சமூகம் பற்றி சிந்திப்பதே ஒரு பெரிய சவால். அதற்காகத் தொடர்ச்சியாக உழைக்க எத்தனை பேர் தயார்? தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ளாமல் தொடர்ச்சியாக உழைக்கும் ஒருவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வாய்ப்புமில்லை.
அவ்வாறெனில் பணமோ புகழோ இன்றி, சுற்றுச் சூழல், ஏழைகள் மற்றும் தாழ்த்தப் பட்டோர் கல்வி, கலை, இலக்கியம், தெளிவான சிந்தனை, ஊழல் ஒழிப்பு என எதாவது ஒன்றுக்கு இடையராது பாடுபடும் அவருக்கு என்ன தான் கிடைக்கிறது?
மன நிறைவு. வாழ்க்கையின் ஆகப் பெரிய ரகசியம் மன நிறைவும் நிம்மதியும் தான் சமூகத்துக்காகத் தான் பணி புரிகிறேன் என்னும் தெளிவும் அந்தப் பணியும் தரும் நிறைவாகும்.
ஏதேதோ உத்தேசமாகக் குத்து மதிப்பாகக் கூறிக் கொண்டே போகிறேன் என்று தோன்றினால் இந்த அமைப்பின் இணைய தளத்துக்குச் செல்லுங்கள்.
SEED என்னும் அமைப்பின் இணைப்பு இது.
அவர்களைப் பற்றிய கட்டுரைக்கான இணைப்பு இது.
பழனிச்சாமி என்னும் ஒரு நல்லியதம் இதை நடத்துகிறார். எனக்குத் தெரிந்து 30 ஆண்டுகள் கடந்த நிறுவனம் இது. ஆயுள் தண்டனை பெற்றவர்களின் குழந்தைகள் அல்லது தாய் தந்தையர் இருவரையுமே கொலையால் பறி கொடுத்த குழந்தைகள், அல்லது இருவரில் ஒருவர் இம்மாதிரி தண்டனை பெற்றவரோ அல்லது உயிர் நீத்தவரோ. சமூகம் அவர்களை உதறித் தள்ளும். அவமானப் படுத்தும் குற்றவாளிகளாக மாற்றத் துடிக்கும். அந்தக் குழந்தைகளுக்காக தனது வங்கிப் பணியைத் துறந்து, குடும்பத்துக்கும் எந்த வருவாயும் தராமல் தன் நேரம் முழுவதையும் நிறுவனத்துக்காகவே அர்ப்பணித்தவர் அவர். இந்த இணைய தளத்த்தில் மட்டுமல்ல எங்குமே அவரது புகைப்படம் கிடைக்காது. அப்படி அடக்கத்துடன், தன் வாழ்க்கையின் லட்சியமாக இதைச் செய்து வருபவர். அவருடன் எனக்குப் பல காலமாக தொடர்பு உண்டு. சமீபத்தில் ஒரு எளிய நன் கொடை தருவதற்காகச் சென்றிருந்தேன்.
வெற்றி எது? பழனிச்சாமியின் வெற்றியே வெற்றி.
சமூகக் கைத்தட்டல் பெற்றுத் தரும் வெற்றி நம்மை தான் – தன்னலம் என்னும் தண்டவாளத்தில் இருத்தி விடும்.
வேறு சில விஷயங்களைக் கூறி அடுத்த பகுதியில் நிறைவு செய்வேன்.
(image courtesy:https://deponti.livejournal.com)