சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி
சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகவும் மோசமாகும் போது, நாம் பொறுப்பில் உள்ளவர்கள் முதலில் இணைய தள சேவைகளை முற்றிலுமாக நிறுத்துவதைக் காண்கிறோஂம். வதந்திகள் மற்றும் விஷமமான பதிவுகளைத் தடுத்து, நிலைமை மேலும் மோசமாகாமல் காப்பதே அதன் நோக்கம்.
சாத்தான் வேதம் ஓதுவது போல, பல சமூக ஊடகங்களில் எச்சரிக்கைகள் வலம் வரும்.
சுமார் 25 வருடங்கள் முன் தனியார் தொலைக் காட்சி வரும் முன் அரசாங்கத் தொலைக் காட்சி தான் வரும். அதில் ‘வயலும் வாழ்வும்’ மற்றும் செய்திகள் மற்றும் அபூர்வமாகப் பொழுது போக்கு ஒளிபரப்பு இருக்கும். இருந்தும் அந்தக் காலத்திலும் தொலைக் காட்சியைப் பார்த்தபடி அமர்ந்திருந்த பெரிசுகள் அனேகம். இன்று தொலைக் காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் தமது நேரத்தையும் கவனத்தையும் வாரி வழங்கும் எல்லா வயதினரையும் காண்கிறோம்.
கண்ணை மூடிக் கொண்டு , ‘இந்தக் கர்மாந்திரமெல்லாம் வேண்டாம்’ என்று போலியாகக் கூறி விட்டுப் போகலாம். அதற்காக நான் இந்தத் தொடரை எழுதவில்லை.
இன்று சமூக ஊடகங்கள் வழி நாம் ஒரு மின்னணு சமூகத்தில் அங்கமாகி இருக்கிறோம். உண்மையில் இன்று இந்த சமூகமே உண்மையான சமூகம். இந்த சமூகத்தில் தனது பிம்பம் எப்படி இருக்கிறது, தனது பதிவுகள் எந்த அளவு வரவேற்பைப் பெறுகின்றன என்பது, வயது வித்தியாசமின்றி ஒரு பித்தாகவே இருக்கிறது. இந்த வகை சமூகத்தின் அடிப்படை மற்றொரு மனிதனுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் ஒரு உந்துதலே. இது இயற்கையானது தான். நல்லதும் கூட. என் சக மனிதனுடன் ஒரு தொடர்பில் ஒரு பிணைப்பில் நான் இருக்க விரும்புவது தானே மனித இயல்பு. உண்மையில் அது இல்லா விட்டால் தான் கவலைப் பட வேண்டும்.
நகர வாழ்க்கையின் மிகப் பெரிய சாபம் அது தரும் தனிமை. நகரில் நீங்கள் பக்கத்து வீட்டுக்காரருடன் பேச முயன்றால் அதை அவர் அனேகமாக விரும்பாத ஒன்றே எனத் திட்டவட்டமாகக் கூறலாம். நிறைய வாய்ப்புகள் மற்றும் நிறைய ஆசைகள் மற்றும் நிறையப் போக்குவரத்து என ஒவ்வொருவருக்கும் தனது நேரத்தை வேறு யாருக்கும் ஒதுக்க இயலாத நிலை.
இவை எல்லாமே கைபேசியில் ‘புத்திசாலிக் கைபேசி’ மற்றும் சமூக ஊடகங்கள் வரும் முன்பே இருந்த நிலை. இப்போது ஒருவர் வீட்டுக்குள் இருந்தாலும், பொது இடத்திலோ அல்லது உறவு- நட்புச் சூழலில் எத்தனை பேர் நடுவே இருந்தாலோ – எதுவாய் ஆனாலும் அவர் சமூக ஊடகத்தில் உள்ள சமூகத்துடன் இடையறாத் தொடர்பில் இருப்பதை நிறுத்துவதே இல்லை.
நமக்குத் தெரிந்து கண்டிப்பாக வயது (அதாவது தலைமுறை) மற்றும் ஆண்பால் பெண் பால் என சாதாரணமாகப் பகிர்வு இருக்கிறது.
‘வாட்ஸ் அப்’ மட்டும் மிகப் பெரிய சிக்கலான ஒன்றாக ஆக்கப் பட்டிருக்கிறது. பணி இடத்தில் வெவ்வேறு குழுக்களில் பல பணியாளர்கள் சேர்க்கப் பட்டு இரவு அவர் படுக்கப் போகும் வரை அவரை சாட்டையை வைத்துச் சுழற்றி அடிக்கும் வேலை அனேகமாக எல்லா நிறுவனங்களிலும் உண்டு. என் விருப்ப ஓய்வுக்கு முக்கியமான காரணிகளுள் அதுவும் ஒன்று.
வாட்ஸ் அப்பில் பள்ளித் தோழர்கள் தோழிகள் (தனித் தனியாக) குழுக்களாய் (ஜாதி அடிப்படைகள் படி) இருப்பது அதிகமாகி வரும் கலாச்சாரம். அவை பணியிடக் குழுக்கள் அளவு மோசமானதல்ல.
வலைத் தளம் அல்லது வலைப்பூத் தளம் (இப்போது நான் எழுதிக் கொண்டிருக்கிறேனே அவை போன்றவை) மிகவும் குறைவாக மக்கள் நாடுவது. அனேகமாக அவை புலம் பெயர்ந்தோரும் படிக்க வேண்டும் என விரும்புவோர் எழுதுவது வாசிப்பது.
முக நூலில் நான் மூன்று முயற்சிகளைச் செய்தேன். இப்போது மூன்றாம் முயற்சியும் முடிவுக்கு வந்து விட்டது. முக நூல் மிகவும் பரபரப்பாகப் பயன்படுத்தப் படுவது. இதில் இளசுகள் மிக சுறுசுறுப்பு. பெரியவர்கள் சற்றே பின் தங்கினாலும் நிறைய ஆர்வமுள்ளவர்கள். டுவிட்டர் அனேகமாகப் பிரபலங்கள் மற்றும் அரசு உயர்நிலை அதிகாரிகள் என்னும் பெரிய உயரத்தில் இருந்து சினிமா ரசிகர் என்னும் சாதாரணம் வரைப் பயன்படுத்தப் படுகிறது. அது பிற ஊடகங்கள் அளவு பரபரப்புக்கு மக்கள் தேடுவது அல்ல.
இன்று சமூக ஊடகங்கள் நாம் ஏறிய புலி என்னுமளவு பல சிக்கல்களை உண்டாக்கி விட்டன. அடுத்த பகுதியில் நாம் எந்த அளவு சிக்கலில் இருக்கிறோம் என்பதைத் தொடர்வேன்.
(image courtesy:dreamstime. com)