சமூக ஊடகம் – நாம் ஏறிக் கொண்ட புலி – பகுதி 3
நம்பகத் தன்மை இல்லாத ஒரு செய்திப் பரிமாற்றம் அல்லது உரையாடல் நிகழ்வது மிகப் பெரிய சிக்கல் என்பதைக் குறிப்பிட்டேன்.
இரண்டாவதாக நான் காண்பது மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் சமூகத்துள் தொடர்பில் இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் ‘வாட்ஸ் அப்’ பிரியர்கள் உண்மையில் தம்மைத் தாமே சுருக்கிக் கொண்டு விடுகிறார்கள். எனக்கு மாங்கு மாங்கு என எதையாவது அனுப்பி வைக்கும் நண்பர்கள் என்னை அழைப்பதே இல்லை. நான் அவர்களை அழைக்க சரியான சந்தர்ப்பத்துக்காகக் காத்திருக்கிறேன். திருச்சி சென்றிருந்த போது நல்ல நண்பர் ஒருவரை அழைத்தேன். அவர் அப்போதும் அந்த அழைப்பை எடுக்கவில்லை. அதன் பின் அழைக்கவும் இல்லை. ஆனால் அதற்காக வருந்தி ஒரு செய்தி அனுப்பி விட்டார்.
இப்போதும் அவர் நல்ல நண்பரே. அவரைப் பற்றிய புகார் அல்ல இது. என்னுடைய தாழ்மையான கருத்தில் நாம் நன் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருப்போரை நேரடியாக வருடம் ஓரிரு முறையேனும் தொடர்பு கொண்டு அதாவது நேரடியாகவோ அல்லது குறைந்த பட்சம் தொலை பேசி அழைப்பிலோ விசாரிப்பதில் உள்ள ஒட்டுதல் வேறு எதிலும் இல்லை.
பொது விஷயங்கள் பற்றிய கருத்துப் பரிமாற்றமும் தேவையே . ஆனால் நாம் அதில் ஏற்கனவே அனுபவமோ அல்லது விஷய ஞானமோ பெற்றிருந்தால் அதை வைத்து நேரடியாக அசலான ஒரு செய்தியை சுருக்கமாக அனுப்பலாம். துண்டு துண்டாக வெவ்வேறு விஷயங்கள் நாம் சரி பார்த்தவையாக அல்லது நம் நம்பிக்கையை ஆதாரத்துடன் உறுதி செய்வதாக இருக்கும் பட்சத்தில் நாம் அதை அசலாகவும் அனுப்பும் பட்சத்தில் ஒரு நல்ல மனித உறவில் புதிய முன்னோக்கிய நகர்வாக அது இருக்கும்.
உங்களுடன் நான் நட்பாக இருக்கும் போது ஏதேனும் பரிமாற்றம் செய்யத் தான் வேண்டும். ஆனால் நானும் உங்கள் ரசனை, உங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகள் பற்றி கொஞ்சமேனும் அக்கறை எடுத்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சடங்கு போல நட்புடன் செய்யும் பரிமாற்றம் ஆனதே இந்த இரண்டாவது சிக்கல்.
மேலும் விவாதிப்போம்.