சமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -4
எல்லோரிடமும் தந்து திறமையை வெளிப்படுத்த ஒரு மேடை அல்லது மன்றம் கிடைக்க வேண்டும் என்னும் ஏக்கம் இருக்கிறது. இது சரியானதே. அதை சமூக ஊடகம் நிறைவு செய்கி/றதா என்பதே கேள்வி. சமூக ஊடகம் நி/றைய பேரால் கவனம் பெறுவது உண்மையே. ஆனால் கலை அல்லது அறிவுத் தளம் தொடர்பான பதிவுகள் அதை முறையாக ரசிக்கும் பின்னணியும் அசலான ஆர்வமும் உள்ளவரிடம் போய்ச் சேற வேண்டும். இல்லையா? இந்தப் புள்ளியில் சமூக ஊடகங்கள் மிகவும் சறுக்கி விடுவதே நிஜம்.
உங்களிடம் மென் பொருள் தளத்தில் நிறைய அறிவு இருக்கிறது. பல செயலிகள் எந்த அளவு நமது தனிப்பட்ட விவரங்களைத் திருடுகின்றன என்பதை உங்களால் எடுத்துக் காட்ட முடியும் என்றால், அதைப் பகிரச் சரியான இடம் நிபுணர்கள் பதிவுகளை வாசித்து அதன் சிறப்புகளைக் குறிப்பிட்டோ அல்லது அவர் விட்டுவிட்டவற்றை எடுத்துக் காட்டியோ அவர் எழுதியுள்ள நாளிதழ் அல்லது இணைய தளத்தில் பதில் எழுதுவதே. ஒரு துவங்கு புள்ளியாகவே இதை நான் குறிப்பிடுகிறேன். கண்டிப்பாக ஒரு விரிவான பதிவை நீங்கள் முழுமையாக ஒரு இதழுக்கு அனுப்பலாம்.
பெண்கள் பெண்களுக்கெனவே வரும் இதழ்களில் உள்ள இடத்தை சரிவரப் பயன்படுத்தலாம். கலையை ரசிக்கும் ரசனை உள்ளோர், அறிவு தாகம் உள்ளோர் நிறையவே இருக்கின்றனர். நாம் முதலில் எந்த ஊடகங்கள் அவற்றை சரிவர மையப் படுத்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளும் அளவு, அதில் ஈடுபாடு காட்டும் அளவு நாமும் அதன் வழி வெளிப்படும் வாசல் திறக்கும்.
பெரிதும் நாம் எளிய தீர்வாக வாட்ஸ் அப் அல்லது இன்ஸ்டா கிராம் அல்லது முக நூல் வழி ஒன்றை வெளியிட்டு விடுகிறோம். அது ஹிந்தி மொழி பேசுவோர் நடுவில் பாரதியார் கவிதையை நாம் உணர்ச்சி பொங்க வாசிப்பது போன்றதே.
வள்ளுவர் இதை முன்பே நமக்குக் கூறி விட்டார்
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று – குறள் 236
எனவே நாம் சொல்ல வருவதின் மதிப்பை உணர்ந்து ரசிக்கும் போற்றும் புகழ் மிகுந்த சூழலில் தோன்ற வேண்டும். புகழொடு தோன்றுதல் அதுவே. சமூக ஊடகங்கள் நாம் சரியான தளத்தில் இயங்கும் போது நம்மையே மேற் கோள் இடலாம். இல்லாமலும் போகலாம். ஆனால் இன்று சமூக ஊடகத்தின் பிம்பம் புதிய முயற்சியை சரியாக ரசித்து விமர்சிப்போர் இல்லாத இடமே.
மேலும் பார்ப்போம்…