சமூக ஊடகங்கள் – நாம் ஏறிக் கொண்ட புலி -5
‘ நாளையோடு வாட்ஸ் அப் இலவசமாக இயங்காது’ என்னும் வதந்தியை நாம் நூறு முறையாவது பகிரப் பட்டதைப் பார்த்து விட்டோம். நிறையவே தெய்வ நம்பிக்கை அடிப்படையிலான, சந்திர கிரகணம் பற்றிய தொன்மையான மூட நம்பிக்கை அடிப்படையிலான பதிவுகளை நாம் மானாவாரியாக வாரி வழங்கும் நண்பர்களால் சூழப் பட்டுள்ளோம்.
நமக்கு ஆர்வம் மிகுந்த துறையை நாம் ஆழ்ந்து அறிந்து கொள்ள இயலும். இன்றைய தலைமுறைக்கு இணையாக முந்தைய தலைமுறையும் இணையம் மூலம் எத்தனையோ தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
வாழ்க்கையில் ஒரு தனி மனிதன் செலவழிக்கும் பயனுள்ள பொழுது ஒரு சமூகத்துக்கே மூலதனமாக முடியும்.
தேவை நம்பிக்கை தரும் பதிவுகள். ஆழ்ந்த பார்வையுள்ள பதிவுகள். மாற்றத்தைக் கோரும் பதிவுகள். நாம் பிறருடன் சமூகமாய் இயங்க சமூக ஊடகங்கள் மிகப் பெரிய தளங்களே ஆனால் அவை பொழுது போக்கு மற்றும் நம்பகத் தன்மையற்ற ஆழமற்ற பதிவுகளால் உளுத்துப் போய் விட்டன.
நாம் ஏறிக் கொண்ட புலி போல அதை விட முடியாமல் தடுமாற வேண்டாம்.
மெல்ல மெல்ல அதனுள்ளும் நாம் மாற்றங்களைக் கொண்டு வர முயல்வோம். விவாதங்களுக்கு பல நட்புக் குழுக்களை நாம் பயன்படுத்த முடியும். பயனுள்ள விவரங்கள் (ரயில் நேரம் மாறியது போல) சரிபார்த்த பின் பகிரலாம். ஆனால் நம் இலக்கு சிந்திக்கும் ஒரு சமூகத்தை மெல்ல மெல்ல ஒன்று படுத்துவதே.
நிறைவுற்றது.