ப. சிங்காரம் பற்றி தமிழ் ஹிந்து நாளிதழில் சி.மோகன் கட்டுரை
ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ வெளி வந்த காலத்தில் கல்கி, சாண்டில்யன் போன்றவர்களின் சிலிர்ப்பூட்டும் எழுத்துகளின் வழி மட்டுமே வரலாறு காணப் பட்டது. தமிழரின் பெருமைய் பீற்றிக் கொள்ளும் மற்றும் காதல் மற்றும் வீரத்தில் மெய் மறக்கும் மயக்க மருந்தாகவே அவை இருந்தன. மன மகிழ்ச்சிக்கான எழுத்துக்களுக்குத் தனி இடம் உண்டு. ஆனால் வரலாற்றை இலக்கியம் வழி மறு வாசிப்பு செய்வது என்பது நம் பாரம்பரியத்தின் மறு பக்கம் மற்றும் பொதுவான மனித பலவீனங்கள் பற்றிய ஆழ்ந்த பார்வைக்கு நம்மை இட்டுச் செல்லும். ப.சிங்காரம் அந்த திசையில் எழுதியது தமிழில் மிகவும் குறைவாகவே பயணிக்கப் பட்ட ஒரு தடத்தில் முத்திரை பதித்த சாதனை. அவரது ‘புயலிலே ஒரு தோணி’ சுதந்திரப் போராட்ட கால இறுதியில் நேதாஜியின் ‘இந்திய தேசிய ராணுவம் ‘எழுச்சி பெற்ற கால கட்டத்தில் இந்தோனிசியா, மலேசியா மற்றும் இந்திய நிலங்களில் விரியும் நிகழ்வுகளின் நாவல். நவீன் இந்த நாவல் பற்றிய விரிவான விமர்சனத்தைத் தமது இணைய தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அதற்கான இணைப்பு ————————- இது.
சி.மோகன் சிங்காரத்துடன் தமக்கு இருந்த தனிப் பட்ட நட்பின் தருணங்களை நினைவு கூர்ந்திருக்கிறார். சிங்காரம் தமக்கென ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி, நூல் வெளியீட்டு விழாக்களை நடத்தி, தமது நூல்களை கவனப் படுத்தும் வேலைகளைச் செய்யக் கூடியவராக இருக்கவில்லை. ஆனால் ஒரு அசலான, கூர்மையான மற்றும் புதிய தடம் காணும் பிரதி எப்படியும் கவனம் பெறும் என்பதற்கு ‘புயலிலே ஒரு தோணி’ ஒரு நல்ல உதாரணம். அதையும் சிங்காரத்தின் பிற படைப்புக்களையும் கவனப் படுத்தியதற்காக நாம் மோகனுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம். தமிழ் ஹிந்துவில் மோகனின் பதிவுக்கான இணைப்பு ———— இது.
(image courtesy:tamil.thehindu.com)