அஞ்சலி – கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகவும் வருத்தமளிப்பது.
என் பெற்றோர்கள் இருவருமே ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள். அவர்கள் இருவருக்குமே கலைஞர் கருணாநிதி எடுத்த ஒரு கொள்கை முடிவு திருப்பு முனையாக அமைந்தது. இதை நூறு முறையாவது எனக்கு வெவ்வேறு வயதுகளில் என் அம்மா என்னிடம் சொல்லி இருப்பார்.
ஜெயமோகன் கலைஞரை ‘அவர் இலக்கியவாதி இல்லை’ என்று குறிப்பிட்டு ஒரு விவாதம் மூலமே நவீன இலக்கியம் பற்றிய அறிமுகத்தை வாசகருக்கு ஏற்படுத்த நினைத்தார்.
கலைஞர் காலத்தில் அடுக்கும் மொழி, எதுகை மோனை மற்றும் மரபுக் கவிதை இவைகளே இருந்தன. அவர் சமகாலத்தில் எழுதி இருந்தால் பல கவிஞர்கள் மற்றும் புனைகதை எழுத்தாளர்கள் வியக்கும் வண்ணம் எழுதி இருப்பார். ஒரு எழுத்தாளனாக அவரது ஆட்சி காலத்தில் என் நூல்கள் மட்டுமல்ல, பல எழுத்தாளர்களின் நூல்கள் நூலகத்தால் வாங்கப் பட்டதை நான் மிகவும் வியந்திருக்கிறேன். வள்ளுவர் கோட்டம், வள்ளுவருக்கு குமரியில் சிலை, உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் என அவருக்கு தமிழ்ப் பண்பாடு மற்றும் இலக்கியம் மீது இருந்த ஈர்ப்பும் அர்ப்பணிப்பும் அசலானவை.
பண்பாடு என்பது மிகவும் விரிந்தது, கலவையானது, சிக்கலானது. தமிழ்ப் பண்பாடு விதிவிலக்கல்ல. அதற்கு மிக அண்மையான தமிழ் அடையாளத்தை அவர் முன் வைத்தவர். அவரது அரசியல் பற்றி நான் அதிக அக்கறை கொள்ளவில்லை. ஏனெனில் அரசியல் களம் அப்படிப் பட்டது.
அவருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி.