ஓரினச் சேர்க்கை குற்றமில்லை- வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு
உலகெங்கிலும் மதவாத பழமைவாத குழுக்கள் பல காலமாக ஓரினச் சேர்க்கையைக் கடுமையாக எதிர்த்தவர்களே. இந்திய குற்றவியல் சட்டத்தில் அது குற்றமாகவே தொடர்ந்து வந்தது. இதை அரசியல் சாசன அமர்வாக உச்ச நீதிமன்றமே நீக்க இயலும் என்பதே நிலை. 2013ல் அது உச்ச நீதி மன்றத்தால் குற்றம் என்றே கருதப் பட்டு ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. பிறகு மீண்டும் வழக்குகள் தொடர 6.9.18 அன்று உச்ச நீதி மன்றம் அந்தக் குற்றப் பிரிவு 377ஐ நீக்கி விட்டது. அதற்கான விரிவான செய்தி தமிழ் ஹிந்து நாளிதழில் உள்ளது. அதற்கான இணைப்பு ————- இது.
மாற்றுத் திறனாளிகளை நான் சமூகத்துக்குள் என்றுமே மதித்ததில்லை. அவர்களுக்கு உரிமைகள் உண்டு ஏட்டளவில் மட்டுமே. இதே மன நிலையையே நாம் ஓரினச் சேர்க்கையாளர் மீது காட்டுகிறோம். உண்மையில் அவர்களின் வித்தியாசமான காதல் மற்றும் சேர்க்கை அவர்களின் உரிமையே. அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அந்தரங்கம் தொடர்பானது மட்டுமே. இதை அரசு முடிவு செய்வது தனி நபர் சுதந்திரத்துக்கு மிகப் பெரிய தடையாகும். மதவாதிகள் தனி நபர் சுதந்திரம் மற்றும் உரிமைகளை எப்போதுமே எதிர்ப்போர் தான்.
சில தவறான பிரச்சாரங்கள் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக எப்போதுமே இருந்து வருகின்றன. அவற்றைப் பார்ப்போம்.
1.ஓரினச் சேர்க்கையாளர்கள் வன்முறையால் விருப்பமில்லாதவரை அதில் கட்டாயப் படுத்துவார்கள். உண்மையில் இது மேம்போக்கானது. உண்மையில் எப்படி பெண் மீது பலாத்காரம் தண்டனைக்கு உரியதோ அதே போல ஓரினச் சேர்க்கையில் வன்முறை தண்டனைக்கு உரியதே. தனி நபர் சுந்தந்திரம் மட்டுமே ஓரினச் சேர்க்கை என்னும் உரிமையை ஆதரிப்போர் முன் வைப்பது. வன்முறையை அல்ல.
2. இது எப்போதுமே இருந்ததில்லை என்னும் மற்றொரு வாதம் உண்டு. அது அப்பட்டமான பொய்ப் பிரச்சாரம். எப்போதுமே அது ரகசியமாக இருந்தது என்பதே உண்மை நிலை. நான் வரலாற்றுக் காலத்தை சேர்த்தே கூறுகிறேன்.
3.ஓரினச் சேர்க்கையை எதிர்ப் பால் காதலுக்கு மாற்றாக முன் வைக்கிறார்கள். நிச்சயமாக இது பொய் என்பது யாருக்குமே புரியும். எதிர்ப் பால் காதல் எப்போதும் இயல்பாக அமைவது. ஓரினச் சேர்க்கை வித்தியாசமான மற்றொரு இயல்பு. அவ்வளவே. அதை யாரும் ஒரு மாற்றாக உருவாக்கவே இயலாது.
4. அவர்கள் மோசமான சமூகம். இல்லை. அவர்கள் சமூகத்தின் சற்றே வித்தியாசமான ஒரு அங்கம். அவர்கள் அமைப்பு மற்றும் கொண்டாட்டங்கள் பிறரின் சமூகக் கொண்டாட்டங்கள் போல நாம் ஏற்க வேண்டியவையே.
5.மூன்றாம் பாலினர் தான் இதில் சம்பந்தப் பட்டவர். இது முற்றிலும் பிரமை. உண்மையில் அவர்களுக்கு சட்ட ரீதியாக இதில் நேற்று வரை பிரச்சனைகள் இருந்தன. மூன்று பாலினருமே ஓரினச் சேர்க்கை என்னும் வித்தியாசமான காதலில் காலம் காலமாக இருந்தவர்களே. இருப்பவர்களே.
முடிவாக ஓரினச் சேர்க்கை பற்றி தமிழில் வந்த அரிய கதைகளில் ஒன்றுக்கான இணைப்பை நான் தருகிறேன். நான் எழுதினேன் என்பதால் அல்ல. தமிழில் அது இலக்கியவாதிகளே தள்ளி வைத்த மையக் கரு.
(image courtesy:peacemonger.org)