பசுமைப் பணியில் அர்ப்பணிப்புள்ள இளைஞர்கள் அமைப்பு – நனை
மாதா மாதம் நான் மரக்கன்றுகளை தன்னார்வலர்களுக்குத் தந்து அவ்வழியாக என் அறுபதாம் பிறந்த நாளை இப்போதில் இருந்தே கொண்டாடி வருகிறேன். இதை நான் ஏற்கனவே இந்த தளத்தில் பதிவு செய்து இருக்கிறேன்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஈஷ்வர் என்னும் நனை அமைப்பின் களப்பணி வீரருடன் தொடர்பு வந்தது. இன்று அவர்கள் கோவிலம் பாக்கம் என்னும் பகுதியில் மரக்கன்று நட குழி தோண்டுவதை நேரில் பார்த்தேன். மூன்று அடி ஆழக் குழியில் நட்டால் மட்டுமே மரம் உறுதியாய் நிற்கும். ஆழ வேர் ஊன்றும். புயலில் விழாது. என்பதால் அதை இயந்திரம் வைத்துத் தோண்டி எடுக்கிறார்கள். இன்று மிகுந்த அக்கறை ஈடுபாடு மற்றும் மரங்கள் மீது ஆழ்ந்த நேசம் கொண்ட மதன் என்னும் இளைஞரையும் சந்தித்தேன். களப் பணியாற்றும் பாபுவையும். வாரக் கடைசி நாட்களை அவர்கள் மரங்களுக்கே அர்ப்பணிக்கிறார்கள். எளிய வருவாய்ப் பின்னணி. ஆனால் உயர்ந்த லட்சியம் மற்றும் அரிய அர்ப்பணிப்பு உணர்வு உள்ள நம்பிக்கை நட்சத்திரங்கள்.
இந்த இளைஞர்களுக்கு உடலுழைப்பு வழி, மரக் கன்றுகளை வாகனத்தில் இடம் மாற்றுவது வழி மற்றும் மரக்கன்றுகளை நன்கொடையாய் வழங்குவது வழி நாம் உதவ முடியும். மிகுந்த சமூக விழிப்புணர்வு கொண்ட இளைஞர்கள் இவர்கள். தொடர்புக்கு ஈஷ்வர் 9841085484 மற்றும் மதன் 9095391062.