சசி தரூரின் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றி – ஆர் எஸ் எஸ் கொள்கையில் சுதாரிப்பு
ஆர் எஸ் எஸ் அமைப்பின் இரண்டாம் தலைவர், அதாவது நிறுவிய ஹெட்கெவாருக்குப் பின் பொறுப்பேற்ற கோல்வார்க்கரின் Bunch of Thoughts என்னும் நூலுக்கு ஆர் எஸ் எஸ் அமைப்பின் கொள்கைகளுக்கான ஆதாரமும் வழிகாட்டுதலுமான அந்தஸ்து எப்போதுமே இருந்து வந்தது. அந்த நூல் கோல்வார்க்கரின் உரைகளின் தொகுப்பு. சசி தரூர் Why I am a Hindu என்னும் தமது புத்தகத்தில் கிறித்துவர் மற்றும் இஸ்லாமியர் ஆன சிறுபான்மையினர் மீது கடும் தாக்குதலும் வெறுப்பும் காட்டும் பல பதிவுகளை மேற்கோள் காட்டி இருந்தார். இந்த வாரம் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தற்போதைய தலைவர் மோகன் பாகவத் கோல்வார்க்கரின் Bunch of Thoughts நூல் அப்படியே புனித நூலாகப் பின்பற்றப் பட மாட்டாது எனவும் அதன் பல பகுதிகள் இன்றையச் சூழலுக்குப் பொருந்தாதவை என்றும் ஒரு சுதாரிப்புச் செய்து கொண்டுள்ளார். அந்தச் செய்திக்கான இணைப்பு —- இது.
மதத்தின் அடிப்படையில் நாட்டைப் பிளவு படுத்துவது நுனி மரத்தில் அமர்ந்து அடி மரத்தை வெட்டும் செயல் . இது அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் செய்யும் அமைப்புக்களுக்கும் புரிவதே இல்லை. இன்று ஆர் எஸ் எஸ் சுதாரித்துக் கொண்டிருக்கிறது.
அறிவுத் தளத்தில் மற்றும் ஊடகத்தில் இடையறாது இயங்க வேண்டும் என்பது சசி தரூர் தரும் முன்னுதாரணம். அவரது ஆணித்தரமான வாதங்கள் நிறைந்த Why I am a Hindu நூல் மதவாதிகள் இந்துயிஸத்துக்கு ஒரு புதிய சாயம் பூசி, புதிய வடிவம் கொடுக்க முற்படுவதைத் தோலுரிக்கிறது.
கல்வி அறிவு பெருகி வருகிறது. மத அமைப்புகளின் விளிம்புகளை இளைஞர்கள் புரிந்து கொள்ளும் காலம். ஒன்றுபட்ட ஒரு தேசம் மட்டுமே முன்னேற இயலும் என்பதைப் புரிந்து கொள்வோர் அதிகரித்த படியே இருக்கின்றனர். ஆர் எஸ் எஸ் இதைப் புரிந்து கொண்டு சுதாரித்துக் கொண்டிருக்கிறது. உண்மையிலேயே அதன் போக்கில் மாற்றம் இருந்தால் அது அவர்களின் செயற்பாடுகளில் மாற்றம் ஆக வெளிப்படும். எனக்கு இது ஒரு பாசாங்கு என்றே உறுதியாகத் தோன்றுகிறது.