‘மீ டூ’ ஆண் படைப்பாளிகளிடமிருந்து இது வரைக் கடுமையான விமர்சனத்தையே கண்டது. நான் இது வரை எதிர் வினை ஆற்றவில்லை. பரபரப்புக்காகவோ அல்லது என் தரப்பு தென்பட வேண்டும் என்றோ கட்டாயம் எதுவும் இல்லை. தேவைப் பட்டால் செய்வேன்.
சரி, ரவி சுப்ரமணியம் தடம் நவம்பர் 2018ல் எழுதி இருக்கும் கவிதைக்கு வருவோம். ‘ஊமை வலி ’என்னும் கவிதையில் உள்ள நான் பெண் பால் என இந்தப் பத்தியில் பிடி படுகிறது:
‘வனாந்திரத் தனிமையில்
விபத்துக்குள்ளானவள் போல்
சீர்குலைந்த கணங்களில் துடித்துத் திமிறியதை
உதறி உதறி அழுதது ஞாபகம்’
கவிதையின் பெரும் பகுதியும் பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண்ணின் வலி மிக நுட்பமாகச் சித்தரிக்கப் படுகிறது. என்னை மிகவும் அயர வைத்த விஷயம் பெண்ணின் வலி பற்றிய இந்தப் பத்தியே:
அகக்காம்பெங்கும்
பால்கட்டித்தெறிக்கும் வலிகள்
இந்த வரிகளை ஒரு பெண் கவிஞர் எழுதி இருந்தால் எனக்கு அதில் வியப்பிருந்திருக்காது. ஒரு ஆணாக இருந்து பெண்ணின் வலிகள் பற்றி இத்தனை பரிவு மிகுந்த புரிதலா. வணங்குகிறேன் உம்மை ரவி.
இறுதி பத்தியில் தான் நாம் இது ‘மீ டூ’ பற்றியதென்று புரிகிறோம்:
உறக்கமற்ற இரவுகளில் தளும்பிய துக்கம்
இன்றேனும் வடிந்தது
உள்ளுக்குள் சதா கேட்ட நிராதரவின் குரலுக்கு
விடுதலை தந்து சற்றேனும் மனச்சமன் கொண்டேன்
ஆனாலும் இன்னும் நீள்கின்றன
உங்கள் கேள்விகள்..
’மீ டூ ‘ பற்றிய மிகவும் பரிவு மிகுந்த பதிவு இதுவே ஒரு ஆணிடமிருந்து. பாராட்டுகிறேன்.
(புகைப் படம் நன்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா)