தடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’
ஜனவரி 2019 தடம் இதழில் குட்டி ரேவதி சிறுகதை ‘முழுமதி’ வெளியாகி இருக்கிறது.
கவிஞர் புனைகதையும் எழுதுவது குறைவே. குட்டி ரேவதியின் கவிதைகளை நிறையவே வாசித்திருக்கிறேன். ஆனால் கதைகளை அல்ல. எனவே நான் அவரது கவிதைகளில் காணும் எழுத்தையே இதில் தேடினேன் ஆனால் பெண்ணியவாதம் பேசும் கதை இல்லை இது. மறுபக்கம் அவரது கவித்துவம் வெளிப்படுகிற புனைவு இது. ஒடு படைப்பாளி மாயயதார்த்தத்தைப் பயன்படுத்தும் போது மிக நுட்பமாக ஒன்றைக் கூற விரும்புகிறார் என்பதே காரணம். அதில் அவர் வெற்றியடைந்திருக்கிறாரா என்பதே கேள்வி.
ஒரு சிறுமிக்கு பகலில் ஒரு தலை இரவில் ஒரு தலை என இரு தலைகள் மாறி மாறி வருகின்றன. அவள் ஓர் இளம் பெண்ணாக தன் மனதுக்குகந்தவனுடன் இணையும் இரவில் இரண்டாம் தலை போய் ஒரே ஒரு தலையாக எஞ்சுகிறது. இரவு மட்டுமே அப்போதைய தலையில் கனவுகளும் கற்பனைகளும் ஊற்றெடுத்தன் இரவு வரும் தலையில் அது இருந்த காலத்தில். மாய யதார்த்தத்தின் வழி பெண்களின் (ஒரு வேளை எந்த ஒரு நபரின்) இருமை என்னும் கட்டாயத்தை இந்த மாய யதார்த்தம் சுட்டுகிறது. மிகவும் நுட்பமாக மூன்று தலைமுறைப் பெண்கள் இந்த சிறு கதையில் பாத்திரங்கள். குடும்பத்தாருடன் ஒத்துப் போக இயலாமல் தனியே வசிக்கும் மூதாட்டி, அவருக்கு உதவியாளரான கணவனைப் பிரிந்து வாழும் நடுவயது பெண் அவரின் பெண் குழந்தையே இளம் பெண்ணான கதையின் மையப் பாத்திரம். ஒவ்வொருவரும் உலகை அல்லது சகஜீவிகளைப் பார்க்கும் கோணம் அவர்கள் வாழ்க்கையில் நிற்கும் திருப்பு முனை மற்றும் கடந்து வந்த பாதை இரண்டையும் ஒட்டியே இருக்கிறது. இந்தக் கதையின் வழி தனித்தன்மை மிக்க சிந்தனைத் தடத்தை மற்றும் தேடலை பெண்கள் தனது மண வாழ்வின் தொடக்கத்தில் தொலைக்கிறார்கள் என்பதை மிகவும் நுட்பமாகச் சுட்டுவது. அப்படி தொலைக்காத மூதாட்டியோ உறவான் உதாசீனப் படுத்தப் படுகிறார்.
காட்சிப் படுத்தும் கற்பனை என்பது கவிஞர்களுக்குக் கை வந்தது கதையில் அது சதுரகிரி பற்றிய வர்ணனையில் வெளிப்படுகிறது.
இன்று எழுதும் ஒரு படைப்பாளி புதிய தடத்துக்காகவே தேடப் படுபவர். புதிய கதை, அல்லது புதிய சமூக சீர்திருத்த யோசனையெல்லாம் யாரும் கேட்கவில்லை. அப்படி உபதேச மணிமாலை உருட்டும் கால கட்டமும் இப்போதில்லை. குட்டி ரேவதி மனதில் இருந்த பொறியை சரியாகவே புனைவாக்குவதில் வெற்றி பெற்று விட்டார்.