தடம் இதழில் இந்திரா பார்த்தசாரதியுடன் நேர்காணல்
பிப்ரவரி 2019 விகடனின் தடம் இதழில் இந்திரா பார்த்தசாரதியுடனான நேர்காணல் வாசிக்கக் கிடைத்தது. பெரியவர். மூத்த எழுத்தாளர். புனை கதை மற்றும் நாடக ஆக்கங்களில் தம் அனுபவம் மற்றும் அவை பற்றிய தமது அணுகுமுறையைப் பகிர்ந்துள்ளார். பல ஆளுமைகள் பற்றிய தமது கருத்தையும் தான். அவரிடம் ராமானுஜர் நாடகம் பற்றிக் கேட்கும் போது ஒரு முக்கியமான விஷயத்தை நமக்குக் கவனப் படுத்துகிறார். ராமானுஜர் மைசூர் மேல்கோட்டைத் திருநாராயணபுரம் விக்கிரகத்தைக் கண்டுபிடிக்கத் துணை நின்ற பெருமக்கள் தலித்துகள். அவர்களிடமே அவர் அந்தக் கோயிலின் நிர்வாகத்தையும் ஒப்படைத்தார். பின்னாட்களில் (மேல் ஜாதி) வைணவர்கள் அதை ஆண்டுக்கு ஒரு முறை தலித்துகள் கோயிலுக்குள் வரலாம் என்பதாக நீர்க்கடித்து விட்டார்கள் என்பதே அது. ராமானுஜர் தமது காலத்தில் பல ஆச்சாரியார்கள் எனப்படும் சிறு சிறு மடாதிபதிகளை பிராமணர் அல்லாதோரும் ஏற்கும்படி செய்தது தமிழ் நாட்டில் எல்லோருக்குமே தெரியும்.
இன்று ஆலய வழிபாடு என்பது எந்த திசையில் போய்க் கொண்டிருக்கிறது? அதில் சடங்கு மற்றும் குறுந்தொழில் நிறுவன வருமான வாய்ப்பு இரண்டைத் தவிர எதாவது உண்டா? ஆலய நிர்வாகத்தில் உள்ளவர் ஆகட்டும் அல்லது மணி அடித்து இடைத் தரகராக பூஜை செய்விக்கும் அந்தணர் ஆகட்டும், பூ விற்பவர், பூஜைப் பொருள் விற்பவர் யாருமே வழிபாட்டை, பண்டிகைகளைப் பணம் பண்ணும் வழிமுறை என்பதைத் தாண்டி வேறு எதாவதாகக் காண்கிறார்களா?
என்ன புதிதாகச் சொல்ல வந்தாய் நீ என்று கேட்டீர்கள் என்றால், புதிதாகச் சொல்லவில்லை. புதிய கோணத்தில் ஒன்று தென்படுகிறது. சேர சோழ பாண்டிய பல்லவக் கலை பற்றியோ சிற்பம் பற்றியோ நாம் (பெருவாரி மக்களாகிய நாம்) பேசுகிறோமா? முதலில் கலை அந்தக் காலத்தில் எப்படி இருந்தது, இன்று எந்த அளவு வளர்ந்தது என்பதெல்லாம் நம் அக்கறைக்கு உண்டானவையா? இல்லை. மன்னர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் பாடுபட்டது எல்லாம், பிற்காலத்தில் சில ஆயிரம் பேர்கள் இந்தக் கோயில்களில் வழிபாட்டு வியாபாரம் செய்து சம்பாதிக்க என்றே தான். இந்தக் கோணம் புதிதாக இல்லை?
(image courtesy:tamilliterature.in)