இலங்கை அகதிகளின் மன அழுத்தத்தை நுட்பமாகக் கூறும் காலச்சுவடு சிறுகதை
காலச்சுவடு பிப்ரவரி 2019 இதழில் தொ.பத்தினாதனின் ‘கதையல்ல’ என்னும் சிறுகதை மிகவும் நுட்பமாகப் புனையப் பட்டிருப்பதால் என்னை மிகவும் கவர்ந்தது. இலங்கையிலிருந்து ஒரு குடும்பம் (கிறித்துவர்) தமிழ் நாட்டு அகதிகள் முகாமில் தங்கி இருக்கிறார்கள். ஒரு மூதாட்டி அவரது கணவர், நடுவயதைக் கடக்கும் நிலையில் ஒரு மகள், அவளை விட சற்றை இளைய ஒரு மகன் மற்றும் மிகவும் இளைய மற்றொரு மகன்.முகாம் என்பது என்ன? ஒரு சமூகம் இல்லையா? அங்கே பல குடும்பங்கள் மற்றும் அந்த கிராமம் போன்ற அமைப்புக்கு ஒரு தலைவர் எல்லாம் உண்டு இல்லையா? ரெஜினா என்னும் அந்த நடுவயது மகளின் நடத்தை சரியில்லை. அவர் கணவனை இலங்கையில் இருக்கும் போதே பிரிந்தவர். மற்றும் அவரது ஒரு மகள் இலங்கையில் கன்னியாஸ்திரியாக கிறித்துவ மடத்தில் சேர்ந்து விட்டாள். அவளுக்குத் தன் தாய் மற்றும் பாட்டி தாத்தா பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது உண்மையான நிலவரம் தெரிய வேண்டும். அதற்காக உதவ வரும் ஒரு இளைஞன் அனைவரிடமும் விசாரிக்கிறான். அந்தக் குடும்பத்தையும் சந்திக்கிறான். முகாமில் இலங்கைக் குடும்பங்களை வழி நடத்தும் தலைவரையும் சந்திக்கிறான். ரெஜினா இறந்து விட்டார். அவர் மீதுகாயம் ஏதுமில்லை. மண்ணில் கிடந்தார். காவல்துறையும் விபத்து என்றே முடித்து விட்டார்கள். அந்தக் குடுமத்தில் குடி, மற்றும் பணச் சிக்கனம் இல்லாமல் கடன் வாங்குவது மற்றும் ரெஜினாவின் ஒழுக்கமின்மை எனத் தலைவர் அடுக்கிக் கொண்டே போகிறார். ரெஜினாவின் கணவர் ஏன் அவரை இலங்கையிலேயே பிரிந்தார்? ரெஜினா உண்மையிலேயே விபத்தில் தான் இறந்தாரா? என்னும் கேள்விகளுடன் கதை முடிகிறது.
உண்மையில் இந்தக் கதையில் கதாசிரியரின் குரல் எங்குமே இல்லை. அவர் சித்தரிப்போடு நிறுத்திக் கொள்கிறார். இது கதையின் மிகப் பெரிய வலிமை. இப்போது கதை சொல்லிக் கதை கேட்பது என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. உண்மையில் கதை எந்தக் கதவைத் திறக்கிறது. எந்தப் புள்ளியில் வாசகனின் மனக் கதவைத் திறக்கிறது என்பவையே ஒரு கதையின் வீச்சைத் தீர்மானிக்கின்றன.
ரெஜினா போர் மற்றும் குடும்பத்துள் ஒரு பெண்ணின் கையறு நிலை இவற்றால் மன அளவில் திரும்பவே வர முடியாத அளவு காயப் பட்டிருக்கும் கதா பாத்திரம். இது ரெஜினாவுக்கு மட்டுமா? இன்று முகாமில் ஏனையர் இழித்துப் பேசும் அந்தக் குடும்பத்துக்கு மட்டுமா? போர் என்பது மிகவும் பாதிப்பது பெண்களை. குழந்தைகளை. பல தலைமுறைக்கு ஆறாத காயங்களையும் மற்றும் ஊனங்களையுமே அது விட்டுச் செல்கிறது.
கதாசிரியரின் குரல் ஒலிக்காததால் நம் மனத்தின் கதவு இலங்கைத் தமிழரின் குறிப்பாக விளிம்பு நிலையிலிருக்கும் அகதிகள் அல்லது அங்கேயே தங்கி விட்டவர் நிலை குறித்துக் கரிசனத்துடன் திறக்கிறது. பத்தினாதன் இளைஞர். இன்னும் நிறைய எழுதும் பல அறிய படைப்புக்களைத் தரும் வளம் கொண்டவர். வாழ்த்துக்கள்.
(image courtesy:groundviews.org)