தடம் இதழில் பெருந்தேவியின் பிரமிக்க வைக்கும் கவிதை
கவிதையின் சாத்தியங்கள் என்ன? அதன் வீச்சு எத்தகையது? ஒரு சிறு கதை அல்லது குறு நாவலில் சொல்ல முடியாமல் நழுவுவதை ஒரு நூறு சொற்கள் கொண்ட கவிதையில் பதிவு செய்தல் சாத்தியமா? கவிதை வாசிக்காமல் கவிதை பற்றிய நுண்ணுணர்வு இல்லாத தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பான்மையினர் மற்றும் வளரும் கவிஞர்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய கவிதை இது.
சமகாலத்தில் 44 வயது ஆள் ஒருவன் என்ன மன அழுத்தங்களுக்கு ஆளாகிறான் என்பதை அங்கத்ததுடன் கூறும் இந்தக் கவிதை சமகால வாழ்க்கையில் உள்ள பேரங்கள், நம்பகப் பிணைப்பில்லா உறவுகள், தாக்குப் பிடிக்கப் போராட வைக்கும் வேலைச் சூழல்கள், ஒட்டுதலே இல்லாத சிறையான மண வாழ்க்கை, விடுதலை என்று தேடிப் போய் புதிய சிறையாக மூச்சு முட்டும் திருமணத்துக்கு வெளியே ஆன காதல் அத்தனையையும் உள்ளடக்கி, செறிவு, கூர்மை, விரிந்து விரிந்து செல்லும் உட்பொருளின் வீச்சு என பிரமிக்க வைக்கிறது.
ஒரு சிறு பட்டியலிடுகிறார் பெருந்தேவி.
உன் காரை ஒருவன் முந்திச் சென்றான் , பொறுக்காமல் நீ காறி உமிழ்ந்தாய்- அதனால் தான் உன் கணிப்பொறியை வைரஸ் தாக்கியது,
உன் நண்பனின் சாவு ஒரு காரணமாய் ஒரு வாரத்துக்கு முன்பே உன்னை இரு சக்கர வாகனத்தில் மயிரிழையில் தப்பிய விபத்துக்குள்ளாக்கியது.
தொலைந்த பர்ஸ் அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே உன் காதலைக் கைவிட்டுப் போகச் செய்தது.
வாக்குவாதத்தில் இன்று ஒரு கார் ஓட்டி உன் முகத்தில் விட்ட குத்து ஒருவருடம் முன்பு தேடிப் போய் கைவிட்ட பழைய காதலியை சந்திக்க வைத்தது.
பின்னால் வரும் நிகழ்வு இறந்தகாலச் சறுக்கலுக்குக் காரணம் ஆனது என்னும் கால வரிசைக் குழப்பம் ஒரு யுக்தியாக இல்லாமல் நம்மை உலுக்கி ஆழ்ந்து நோக்கச் சொல்கிறது.
சதா அச்சம், நம்பகமில்லாதார் மற்றும் சுறண்டும் முதலாளி நிறுவனம் செய்யும் மிருகத்தனமான வதைகள் இவை கால வரிசை என்பதே பைத்தியக்காரத்தனம், சதா மன அழுத்தத்தில் இருப்பவனுக்கு எல்லாப் பிடிமானங்களும் இன்னும் அச்சம் அளிப்பவை. எல்லா விபத்துக்களும் வலியை மீறி ஒரு வடிகாலாய் அமைபவை.
கவிதையை இப்படி முடிக்கிறார்: (கார் சச்சரவில் மற்றொரு ஓட்டி இவன் மூக்கில் குத்தி விடுகிறான்- அதன் பின்)
உண்மையில் நீ அவனுக்கு
நன்றி பாராட்ட வேண்டும்
எதுவும் நடக்காதது போல
கைக்குட்டையால் ரத்தத்தைத்
துடைத்தபடி
காரைக் கிளப்புகிறாய்
மருத்துவமனையில்
கட்டுப் போட்டுக் கொண்டு
வீட்டுக்குக் கிளம்பும் நோயாளியின்
பலவீன நிலையில்
ஆறுதலோடு.
சமகால வாழ்க்கையின் வலியை, அதன் சித்திரவதையை, மனித உறவுகளின் உள்ளீடற்ற வெறுமையை, சதா துரத்தும் அச்சத்தை, விபரீதங்கள் பெரு நிழலாகத் தொடர்வதை இதை விடக் கூர்மையாக அழுத்தமாகப் பதிவு செய்ய இயலுமா?
தமிழில் ஆகச் சிறந்த நூறு கவிதைகளை என்று தேர்வு செய்தாலும் இது அதில் இடம் பெறும்.
பாராட்டுகிறேன். இந்தக் கவிதை தந்த நிறைவும் பிரமிப்பும் அபாரமானவை.
(image courtesy:medicalnewstoday.com)