தடம் இதழில் தி பரமேசுவரி கவிதை
‘ஜேகேவின் நட்சத்திரக் கண்களும் சில மலையுச்சங்களும்’ என்ற பொதுத் தலைப்பின் கீழ் தி பரமேசுவரி இரண்டு கவிதைகளை மே 2019 தடம் இதழில் எழுதி இருக்கிறார். அவற்றுள் ஒன்றை மட்டும் விமர்சிக்கிறேன். ஒரு குழந்தை வரையும் சித்திரம் ஒரு படிமமாக விரிகிறது. அது குழந்தைப் பருவத்தில் ஒரு பெண் காணும் கனவுகள், அவள் வளர்ந்து பெண்ணாகும் போது எவ்வாறு மலையேற்றத்திலிருந்து, கனவில் மலையின் உச்சியை எட்டியதில் இருந்து, திடீரெனக் கீழே விழுவதற்கு ஒப்பாக இருக்கின்றது என்பதை மிகவும் காத்திரமான கவித்துவத்துடன் வெளிப்படுத்துகிறது.
குழந்தை வெற்றுத்தாளை வைத்து வரைய வரைய கவிஞர் அதனுள் செல்கிறார். வீட்டை வரைகிறாள். அதற்குள் சென்றமர்கிறார். அதைச் சுற்றியும் குளம் வரைகிறாள். இவர் அதில் நீந்துகிறார். மலை ஒன்றை வரைகிறாள். இவரும் அதில் உற்சாகமாக ஏறி உச்சியை அடைந்து விடுகிறார். குறுகுறுப்பான குழந்தை மலையின் அடிப்பக்கத்தை அழிக்கத் தொடங்கி விடுகிறாள். மலையின் எந்தப் பக்கத்தில் இருந்து நான் குதிக்கட்டும் என்னும் வரியுடன் கவிதை முடிகிறது.
குழந்தைத்தனமாக ஓவியம் வரையத் துவங்கிய பின் ஏன் இப்படி அடிப்பக்கத்தில் இருந்து அழிக்க வேண்டும்? ‘அவளோரக் கண்களின் குறுகுறுப்பை குறுநகையின் மர்மத்தை அறியாது பாடலொன்றை முணுமுணுத்தபடி உச்சியை அடைந்தேன்’ என்னும் இந்த வரி கவிதையின் மிக முக்கியமானது. ஓவியரின் பலம் மற்றும் பலவீனத்தை நாம் இங்கே காண்கிறோம். பலம் ஒரு ஓவியத் தடத்தை மிக உற்சாகமாக வரைந்துவிட இயல்வது. ஒரு திசையை அந்தக் கவிஞருக்குக் காட்டும் அக்கறையும் அதற்கான திறமையும். ஆனால் பலவீனமோ அந்தப் பயணத்தை அல்லது சாகச முயற்சியை முறியடுத்து தலை குப்புற விழச்செய்வது. பெற்றோர் மற்றும் சமூகமே அந்த ஓவியர் என்பது நுட்பமாக வெளிப்படுவது. நல்ல வீச்சும் கற்பனையும் கவித்துமும் வெளிப்படும் கவிதை. பாராட்டுகள்.