International Dance Alliance- அமைப்பின் பரத நாட்டிய விழா
International Dance Alliance வருடந்தோறும் மிகச் சிறப்பான ஒரு நாட்டிய நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். 19.7.2019 அன்று அவர்கள் சென்னை நாரதகான சபாவில் பரதநாட்டியக் கலையின்பத்மா சுப்ரமணியம், தனஞ்செயன் மற்றும் சித்ரா விசுவேஸ்வரன் ஆகிய மூன்று ஜாம்பவான்களின் மாணவ மாணவியரின் பரத நாட்டியத்தை காணக் கிடைத்தது. கலையின் மிகப் பெரிய வித்தகர்களான இவர்கள் தம் முதுமையையும் மீறி இந்த நாட்டியங்களை இயக்கி சீடர்களுக்கு வழி காட்டி, நிகழ்ச்சி முழுதும் இருந்தார்கள். (சித்ரா அவர்களால் நேற்று கலந்து கொள்ள இயலவில்லை). நல்லி குப்புசாமி செட்டியார் தமது உரையில் டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் தந்தையே எம் கே தியாகராஜ பாகவதரை சினிமாவுக்கும் எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களை இசை மேடைக்கு அறிமுகம் செய்தவர் எனக் குறிப்பிட்டார். நல்லி இலக்கியம் கலை தொடர்பான அமைப்புகளுக்குப் புரவலராக நிறையவே உதவி செய்பவர். மிகவும் பாராட்டுக்கு உரிய பணி அவருடையது. இந்த அமைப்பின் செயலர் ராதிகா சுர்ஜீத் சமகாலத்தில் முக்கியமான பரத நாட்டிய குரு.
முதலில் பத்மா சுப்ரமணியம் அவர்களின் ‘ கங்கை தன் கதை கூறல்’ என்னும் நாட்டிய நாடகத்தைப் பற்றிப் பார்ப்போம். பகீரதன் முதல் விவேகானந்தர், தாகூர் வரை ஒரு பெரிய வரலாற்றை கங்கை காண்பதாக வரும் கருப்பொருளுக்குக் கலை சேர்த்ததில் பெரிய வெற்றி கண்டார் அவர். ஹுமாயூன் என்னும் இஸ்லாமிய மன்னரும் அதில் வருகிறார். மூன்று நாட்டியங்களில் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டது இதுவே.
கடவுளர்கள் பார்வதி மற்றும் சிவன் ஆகியோரின் புராணத்தை மையமாக வைத்து சித்ரா விசுவேஸ்வரன் இயக்கிய நாட்டியத்தில் ஆடிய கலைஞர்களின் பாவம், அபிநயம் மற்றும் அப்பழுக்கற்ற நளினமும் கலையுமான பரத அசைவுகள் இவற்றால் நம்மை வியக்க வைத்தார்கள். சில நொடிகளில் ரதமாகிறார்கள் மூவர். நடுவில் நிற்கிறார் பார்வதி தேவி. சிவன் போல் அபிநயத்து நிற்பது எளிதல்ல. காட்சிகள் மாறுகின்றன. பாடலில் கதையின் சம்பவங்கள் நகர்கின்றன. உடனே அதற்குண்டான பரதத்தை அவர்கள் நம்முன் மிகவும் சீராகத் தருகிறார்கள்.
சுமார் 20 வருடம் முன்பு தனஞ்செயன் அவர்கள் நந்தனார் சரித்திரத்தை நாட்டிய நாடகமாக்கி, பரிட்சார்த்தமான ஒன்றாக கலாஷேத்ராவில் முதன்முதலில் அரங்கேற்றினார். அதை நான் பார்த்திருக்கிறேன். அவருடைய திறமை மற்றும் கலையின் வெளிப்பாடு முழுமையாய் நேற்று காணக் கிடைக்கவில்லை. கிருஷ்ண லீலாவை அடிப்படையாய்க் கொண்ட நாட்டியம் எனக்கு சற்றே ஏமாற்றம் தான்.
பத்மா சுப்ரமணியம் கலைக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சிறந்த ஆராய்ச்சியாளர். பரதத்தின் ஆகச்சிறந்தவர்களுள் நிச்சயம் ஒருவர். அவர் பாதம் பணிந்தேன். மிகவும் மனம் நிறைந்தது.