தடம் இதழ் நின்றதாகப் பரவலாகவே தகவல். அது பற்றிய சாரு மற்றும் ஜெமோவின் எதிர்வினைகள் கீழே:
தடம் நின்றதில் ஆச்சரியமில்லை-சாரு
சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவருமே கண்டிப்பாக தடம் இதழ் நின்றதற்கு வருத்தம் தான் படுகிறார்கள். மறுபக்கம் ஓர் இலக்கிய இதழின் மீது தமக்கு இருக்கும் எதிர்ப்பார்ப்புக்களையும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் கூறியதையே நானும் கூறுவதால் என்ன பயன்? அவர்கள் இருவர் மட்டுமல்ல, பல எழுத்தாளர்கள் மற்றும் தீவிர வாசகர்கள் கவனிக்காமல் விடுவது ஒன்றே ஒன்றுதான். தமிழ் வாசிப்பு மற்றும் புத்தித் தளத்தில் உள்ள கடும் வெற்றிடமே புத்தக விற்பனையோ அல்லது வாசிப்போ அல்லது சிறுபத்திரிக்கைகள் பெரிய அளவில் சென்று சேருவதோ அனைத்தையும் பாதிக்கிறது. இந்த வெற்றிடமே இன்று தடத்தைப் பதம் பார்த்திருக்கிறது. அவ்வளவே.
நவீன இலக்கியத்தை தமிழ்ச் சமுதாயம் உள்வாங்கத்துவங்குவதில் சி.சு.செல்லப்பா, க. நா.சுப்ரமணியம், சுந்தரராமசாமி ஆகிய மூவரும் பெரும்பங்காற்றினார்கள். தம் சிற்றிதழ்களில் அவர்கள் படைப்புகளை வெளியிட்டது மட்டுமல்ல, பத்திரிக்கையிலும் பொதுவெளியிலிலும் நவீன இலக்கியம் மற்றும் உலக இலக்கியம் பற்றிய விமர்சனங்கள்-விவாதங்கள் நடக்கப் பெரும்பங்காற்றினார்கள். உண்மையில் அவர்கள் இட்ட அஸ்திவாரமே இன்று பல நல்ல படைப்புகள் வெளி வரவும் மற்றும் பல தீவிர படைப்பாளிகள் உருவாகவும் காரணம்.
இன்று வாசித்ததை விமர்சிக்க மற்றும் விவாதிக்க யாருமே இல்லை. ( நான் விதிவிலக்கு தான். என் இணைய தளம் அதற்கான சான்று. எஸ்.ராமகிருஷ்ணன் இரண்டு முறை வெவ்வேறு கால கட்டத்தில் தம் இரு சிறுகதைகள் பற்றிய என் விமர்சனத்துக்கான இணைப்பைத் தம் தளத்தில் பகிர்ந்தார்.) குறிப்பிட்ட பங்களிப்பை வெங்கட் சுவாமிநாதன் செய்து வந்தார். தீவிர இலக்கியம், புதிய தடம் பதிக்கும் இலக்கியம் எது என்பதோ அதை எப்படி வாசிப்பது என்பதோ அறிமுகமில்லாதோர் பெரும்பான்மை இன்று.
தமிழில் தீவிரமாக இயங்கும் கவிஞர், புனைகதை, கட்டுரை ஆசிரியர்கள் 50 பேர் இருக்க வாய்ப்புண்டு. ஆளுக்கு மாதம் தான் வாசித்தது பற்றி 500 வார்த்தை விமர்சனம் எழுதினாலும் இன்றைய வெறுமையை, வறட்சியை விரட்டும்.
பதிப்பகத்தார் தாமதாமாய் இருந்தாலும் விழித்துக் கொண்டார்கள் என்றே நான் கருதுகிறேன். புத்தகம் பேசுது, நிலவெளி என்னும் இரு பத்திரிக்கைகள் விமர்சனங்களைத் தாங்கி வருகின்றன. இது நல்ல அறிகுறியே.
நிறைவு செய்யும் முன் சாருவின் ஒரு கருத்தை நான் அசல விரும்புவேன். இணையத்தில் நிறைய இலக்கிய சமாச்சாரம் வரவேண்டும் என்கிறார். ஐயா, இலக்கியப் போட்டிகள் எல்லாம் எந்தப் புத்தகங்களுக்கு? அச்சில் வந்தவற்றுக்கு மட்டுமே! மற்றொரு உண்மை, இணையத்தில் சலப்பும் பேர்வழிகளின் ஆதிக்கம் கொடுமையாய் அதிகம். அதனால் அதில் வரும் எல்லாமே சாவி நெல் என மக்கள் கருதுகிறார்கள். பத்து நீண்ட வருடங்கள் நான் இணையத்தில் மட்டுமே எழுதினேன். அவற்றை எல்லாம் அச்சில் புத்தமாகக் கண்ட பின்னரே என் எழுத்து கவனம் பெற்றது.
வாசகர்களுக்கு ஒன்று புரியவில்லை. இன்று பைசாவுக்கு பிரயோசனமில்லாமல் நாங்கள் அர்ப்பணிப்புடன் செய்யும் பணியை எழுத்தை வாசிக்கா விட்டால் நட்டம் அவருக்கே.
(புகைப்படங்களுக்கு நன்றி: சாரு நிவேதிதா, ஜெயமோகன், தடம் இதழ்