19.10.2019 மதுரையில் அமெரிக்கன் கல்லூரியுடன் இணைந்து சிற்றில் என்னும் இளைஞர் அமைப்பு நடத்திய கருத்தரங்கம் மிகவும் பயனுள்ள இனிய பொழுதைத் தந்தது. செப்டம்பரில் அவருடைய வீட்டில் நான் யுவனை முதன் முதலாக சந்தித்தேன். கவிஞராய் இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தமிழ்ச்சூழலில் இயங்கும் ஒரு ஆளுமை எனக்கு வணக்கத்துக்குரிய பேராளுமை. தவிரவும் யுவனின் கவிதைகளைப் பல ஆண்டுகளாக வாசித்து வருபவன். மிகவும் செறிவான, கூர்மையான, கவித்துவம் மற்றும் நவீனத்துவத்தின் வீச்சில் மிளிரும் கவிதைகள் அவருடையவை. இந்த இணைய தளத்தில் பல விமர்சனங்களை நான் அவர் கவிதைகளை உள்வாங்கி எழுதியவன். வீட்டில் பார்த்த அதே வாஞ்சை, அதே எளிமை, அதே நகைச்சுவை, அதே நழுவிச் செல்லும் பாங்கு இவற்றை மேடையிலும் அவர் தந்தார்.
காலையில் மற்றும் மதியத்தின் முதல் அமர்வில் அவரது சிறுகதைகள், நாவல் மற்றும் கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புகள் பற்றிய இளைஞர்களின் உரைகள் ஆழ்ந்த வாசிப்புப் பின்னணியில் நமக்கு மிகச் செறிவான ஒரு விமர்சனத்தை முன்வைத்தன. அவர்களில் ஓரிருவர் பெயரே நினைவில் இருக்கின்றன. அனைவரையும் உள்ளடக்கிய இணையப் பதிவுகள் வரும் போது பகிர்கிறேன்.
சமகால இலக்கிய ஆளுமைகளுள் இலக்கியத்துக்குத் தமது பங்களிப்புக்காகவும், எழுத வரும் இளைஞருக்கு உந்துதலும் வழிகாட்டுதலும் தரும் படைப்புக்களுக்காகவும் மிகவும் மரியாதைக்கு உரியவர். நான் மதுரை வரை போய் வந்தது என் மரியாதையை வெளிப்படுத்தவே. அவருக்கு என் வாழ்த்துக்கள்.