தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விருதுகள் 2019 விழா 29.12.2019 தேனீயில் நடைபெற்றது. அதன் நிறுவனர் விசாகன், பொதுச் செயலாளர் அம்பிகா மற்றும் தலைவர் ரகு ஆகியோர் இதை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர்களுக்கு என் நன்றி. பேசிய அனைவரின் குரலும் குடியுரிமை சட்டத்துக்குக் கடும் கண்டனத்தை எதிரொலித்தது. ஜன நாயகத்தைத் தவறாகப் பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னும் நிலை ஒரு நாள் மாறும் என்னும் நம்பிக்கையை அவர்களின் எழுச்சி வெளிப்படுத்தியது. நான் தீவிரமாக செயற்படுவது இலக்கியப் படைப்பாக்கத்தில் மட்டுமே. களத்தில் உள்ளோருக்கு நான் ஆதரவு தெரிவிப்பதை தனியாகவும் பதிவுகளிலும் செய்து வருகிறேன். ஆனால் என் கவலை ஒன்று இருக்கிறது. இலக்கியவாதிக்குத் தன் கொள்கை சார்புக்கு உரிமை உண்டு. மறுபக்கம் புனைவு என்பது கொள்கையின் எதிரொலியாகக் குறுகி விட முடியாதது. அப்படிக் குறுகினால் அது பிரச்சாரமாகவே நின்று விடும். கலை தனது நுட்பமான தொனியில் வெளிப்படுத்தும் அதிர்வு காலத்தை வென்று நிற்கும். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட நடப்பின் பிரதிபலிப்பாக இருக்காமல் சுதந்திர சிந்தனையின் நீர்க்காத நெருப்பாய் என்றும் கனன்ற படி இருக்கும்.
விருதுகள் பற்றி எனக்குக் கடுமையான விமர்சனங்கள் உண்டு. அதனாலேயே கடந்த இருபது ஆண்டுகளாக நான் விருதுகளை விட்டு விலகியே இருந்தேன். ஓரு முறை பணிவுடன் மறுக்கவும் செய்தேன். விருதுகள் ஒரு படைப்பாளி அல்லது அவரது படைப்புக்களுக்கு தர உத்திரவாதச் சான்றிதழ்கள் ஆகா. அப்படி ஒரு சான்றிதழ் தேவைப் படாமல் நிமிர்ந்து நிற்கும் அசலான ஒரு பிரதி.
சமீப காலமாக எனக்குள் ஒரு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்னெல்லாம் இலக்கிய அமர்வுகள், விவாதக் கூட்டங்கள் நிஜவெளியில் நிகழ்ந்தன. இப்போது அவை மின்னணு வெளி அதாவது சமூக ஊடகங்கள் வழி நிகழ்கின்றன. இன்று ஒரு அமைப்பு தரும் விருது ஒரு கூடுதல் மற்றும் கௌரவிப்பு மையமானவை. கிட்டத்தட்ட ஒரு அறிவார்ந்த ‘பார்ட்டி’ அளவே. ஆனால் அவையேனும் நிகழட்டுமே. விருதுக்குழுவாவது வாசிக்கட்டுமே. ஒரு நூலை மேலெடுக்க இது மற்றுமொரு கதவு. ஒரு கௌரவத்தை நான் நிராகரிக்காது பங்கு பெறும்போது ஒரு அறிவார்ந்த சமூக உறவை நானும் மேலெடுக்கிறேன்.
பிரதிகள் பற்றிய விமர்சனம் மற்றும் விவாதம் மற்றும் மதிப்புரைகள் மட்டுமே இந்த விழாக்களின் இலக்கியச் செறிவை உறுதி செய்யும். இல்லை இவை சிந்தனையாளர்களின் ‘பார்ட்டி’ போல நின்று விடும்.
2016க்குப் பின் அச்சு ஊடகத்தில் எழுதத் துவங்கினேன். 2019லிருந்து எந்த அளவு இயலுமோ இலக்கியக் கூட்டங்களி கலந்து கொள்கிறேன். மதுரையில் ஒரு நாள் யுவன் படைப்புகள் பற்றிய கருத்தரங்கில் கலந்து கொண்டதும், நேற்று தேனீ விழாவில் கலந்து கொண்டதும் தோழமை உணர்விலேயே.