ஜெயமோகனின் நவீனத்துவம் vs நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல்
சமீபத்தில் எழுத்தாளன் அறிவுரைக்கலாமா என்ற தலைப்பில் நவீனத்துவம் பற்றிய இரண்டு கட்டுரைகளை ஜெயமோகன் எழுதி இருக்கிறார். அதற்கான இணைப்புகள் கீழே:
எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா?
எழுத்தாளன் வாழ்க்கை பற்றி அறிவுரைக்கலாமா -2?
அதன் சாராம்சம் இது தான் ஆழ்மனப் பதிவுகளைச் செய்வதான நவீனத்துவம் விரிந்த மற்றும் ஆழ்ந்த பதிவுகளுக்கோ மற்றும் தன் மனக்கிடக்கையை நேரடியான பதிவில் படைப்பாளி பதிவு செய்யவோ இடம் அளிக்காதது. நவீனத்துவம் ஒரு காலகட்டதோடு வாழ்ந்து மரித்து விட்டது. அதன் பின் வந்த பின்நவீனத்துவம் படைப்பில் எந்த மௌனம் அல்லது இடைவெளி விட்டுப் படைக்க வேண்டும் என்றெல்லாம் கட்டாயங்கள் இல்லை என்பது. அசோகமித்திரனும் சுந்தரராமசாமியும் நவீனத்துவத்தின் வரையறைக்குள் அடைப் பட்டார்கள். நான் (ஜெமோ) அப்படி இல்லையாக்கும். (இது சுருக்கம் மற்றும் அவரது சுற்றி வளைத்தலைப் போட்டு உடைக்கும் புரிதல். அவரோ அல்லது சிஷ்யகோடிகளோ இந்தப் புரிதல் தவறு என்றால் எழுதுங்கள். இந்த இணையதளம் அதை வெளியிடும்.)
ஜெயமோகன் தமது இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் வாயிலாகவும், பல புது எழுத்தாளர்களைத் தம் தளத்தில் அறிமுகப் படுத்துவது வாயிலாகவும் செய்யும் பணியைப் பாராட்டுவது என் கடமை. அந்தப் பணி வெளிப்படையானதும் கூட. இருப்பினும் அவர் தமது பாணியை அல்லது படைப்புத் தடத்தை இப்படி எல்லாம் தூக்கிப் பிடிப்பதும், அதுவே சிகரம் என்று பூடகமாய்ப் பதிவு செய்வதும் தேவையற்ற முயற்சிகள். அவரது பிரதிகள் பேசுகின்றன. பேசும். பிற படைப்பாளிகளுக்கும் அதுவே. குறிப்பாக அவர் புதுமைப்பித்தனில் தொடங்கி இன்றுவரை நிகழும் நவீனப் படைப்புத் தடத்தை இவ்வளவு எளிதாய்ப் புறந்தள்ள இயலாது. புறந்தள்ளாமல் ஏற்கனவே எழுதி இருந்தாலும் அவை நீர்த்துப் போய் விட்டன என்னும் தொனியே என் கவலை. நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் மேடைகள் மட்டுமே. அந்த மேடை மிக விரிந்தது. அதன் விரிவு முழுதும் நின்றாடும் திராணியும், தைரியமும், கற்பனையும் கொண்டவர் ஏகப்பட்டவர். குறிப்பாக கவிதை வெளியிலும் அது நிகழ்ந்தது.
நாம் நம் புரிதலை முழுமைப் படுத்திக் கொள்ள கீழ்க்கண்ட கட்டுரைகள் மிகவும் பயனளிக்கும்.
https://www.dancingtoinnerharmony.com/ என்னும் தளத்தின் நான்கு கட்டுரைகள் மிக விரிவானவை. நவீனத்துக்கு முந்தைய புனைவுத் தடங்களையும் விரிவாய் அலசுபவை. பின் நவீனத்துவம் பற்றிய கட்டுரையின் இந்தப் பகுதி மிகவும் சரியான அணுகுமுறை என்பது என் கருத்து:
——————————————————————————
அப்படியெனில் நவீனத்துவம் துவங்கிய 15-ஆம் நூற்றாண்டு துவங்கி அதன் உச்சத்தை அடைந்த 20-ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்ட முயற்சிகளை எல்லாம் பின் நவீனத்துவம் நிராகரிக்கிறதா என்றால் இல்லை, ஒரு வகையில் அதை முழுமை செய்யவே முயல்கிறது.
மேற்குறிப்பிட்ட பல்வேறு கூறுகள் எங்கிருந்து பெறப்பட்டு தொகுக்கப்பட்டன என்பதைப் புரிந்து கொண்டால், அது எந்தக்கூறுகளையெல்லாம் எந்த இயக்கத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறதென்றும் எவற்றை எல்லாம் விட்டுத் தள்ளுகிறது என்றும் புரிந்து கொள்ளலாம்.
பிராய்டின் தனி மனிதன் சமூகத்தினால் அடக்கப்பாட்ட பாலியல், சமூக விருப்பங்கள் கனவுகள் மற்றும் அதிவிருபங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டவன் என்ற கருதுகோளை முன் வைத்து, அவற்றை எல்லாம் படைப்பு வெளியில் முன்வைக்க வேண்டிய தேவையை எடுத்துக் கொண்டது.
நீட்சேயின் இன்மைவாதம்(Nihilism) மற்றும் சந்தேகத்தன்மை முதலியவற்றால் உண்மையை பிரதிபலிப்பது என்பதன் மீதான அவநம்பிக்கையை எடுத்துக் கொண்டது. விட்கென்ஸ்டைனின்(Ludwig Wittgenstein) மொழிக் கோட்பாடுகளிலிருந்து மொழி என்பது உண்மையை அல்லது பொருளை நேரடியாகக் குறிப்பிடும் அறிவார்ந்த ஊடகம் அல்ல, அது குறிப்பிடப்படும் சந்தர்ப்பங்களைப்பொருத்து உருவாகும் குறியீடுகள், தனிச்சையாக அர்த்தங்களை உருவாக்கும் அமைப்பு என்ற கருதுகோளை எடுத்துக் கொண்டது.
ஐன்ஸ்டீனின் சார்பியலிலிருந்து(Relativity Theory) நிச்சயமான, அறிவார்ந்த, தர்க்கம் சார்ந்த பார்வைகளைக் குறித்த கேள்விகளை எடுத்துக் கொண்டது. தியரி ஒப் காம்ப்ளெக்சிட்டி (Theory of Complexity), மண்டல்ப்ரோத்ஸின் (Benoit Mandelbrot) பிராக்டல் ஜியோம்தி(Fractal Geometry) போன்றவற்றயும் எடுத்துக் கொண்டது.
இந்தத் தளத்தில் எழுதிய சிந்தனையாளரின் பெயர் தெரியவில்லை. அவர் அதில் தம் பெயரை இடவும் இல்லை. ஆனால் மிகவும் செறிவான கட்டுரைகள். இணைப்புகள் கீழே:
தமிழவன் தமிழ்க் கவிதைகள் வழி நவீனத்துவத்தை விளக்கும் கட்டுரைக்கான இணைப்பு ——————————> இது.
இலக்கிய விமர்சகரின் பெயர் மற்றும் முழு நூலின் தலைப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த அத்தியாயம் நம் முன்னோடிகளின் பங்களிப்பை விரிவாய்ச் சொல்வது.
மிகவும் வருத்தம் அளிப்பது ஜெமோவின் குரு நித்யா இங்கும் வந்து விட்டார். ஜெமோ போன்ற ஒரு முதிர்ந்த படைப்பாளிக்கு நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவம் குருபீடத்தை முற்றிலும் நிராகரிப்பவை என்பது பிடிபடாதது பெரிய சோகம். இந்திய சிந்தனை மரபின் மிகப் பெரிய ஓட்டை குரு சிஷ்ய பாரம்பரியம். அதை தெளிவாய் முன் வைத்த ஒரே சிந்தனையாளர் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மட்டுமே. ஜெமோ நித்யாவழி புரிதல் அவரது சுதந்திரம். ஆனால் நித்யாவை முன்னுதாரணம் காட்டினால் பிற பதிவுகளையும் கையில் எடுக்க வேண்டும். எனக்கு வசதியான வருடலான ஒன்றைத் தான் தூக்கிப் பிடிப்பேன் என்பது பெரும் படைப்பாளியின் பாட்டை ஆகவே ஆகாது.
நிறைவாக ஒன்றே ஒன்றைக் கூறி முடிக்கிறேன். ஜெமோவுக்கு எதிர்வினை கூறுவதை விடவும் ஒரு தெளிவு இருக்க வேண்டும் என்பதே அடியேனின் நோக்கம்.
நவீனத்துவம் பின்நவீனத்துவம் இரண்டுமே புனைவின் விரிவில், கற்பனை மற்றும் கதை சொல்லும் முறையின் வீச்சில் வாசகனின் மனத்தடைகளை உடைத்து அவனைக் கற்பனை மிகுந்த வாசிப்புக்கு இட்டுச் செல்லும் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டுபவை. இதை நிகழ்த்தும் எந்தப் படைப்பும் நிற்கும். பிற காலாவதியாகும். அதனால் தான் காஃப்காவின் Metamorphosis என்றும் நவீனத்துவத்தின் பின் நவீனத்துவத்தின் பிரம்மாண்டக் கலங்கரை விளக்கமாய் நிற்கிறது.
(image courtesy:shutterstock.com)